Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 22 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொகுப்பு; மருதமுத்து நவநீதன் (அதிபர் க/வத்/பன்/சிவனேஸ்வரா த. வி)
மத்திய மாகாண கண்டி மாவட்ட வத்தேகம கல்வி வலயத்தின் பன்விலை கல்விக்கோட்ட தவலந்தன்னை கந்தகட்டி தேசிய பாடசாலை சாதனைகள் பல படைத்து தனது ஐம்பது வருட பொன்விழாவை பெரு விழாவாக 23.04.2023 ஞாயிறன்று பழைய மாணவர்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் கொண்டாடுகிறது.
பாடசாலையின் பழைய மாணவர்கள் தம்மை உருவாக்கிய கந்தகட்டிய அன்னைக்கு சமர்ப்பணமாக இப்பெரு விழாவை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
பேராசிரியர் சி. மௌனகுருவின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
கௌரவ அதிதிகளாக வத்தேகம கல்விப் பணிமனையின் கல்விப் பணிப்பாளர் W.M.N.T.குணரட்ண கல்விப் பணிப்பாளர் I.M ஹாசிம்,மத்திய மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் பெ.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.விசேட அதிதிகளாக அதிதிகளாக பெருந்தோட்ட அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமி, பன்விலை கல்விக் கோட்ட கல்விப் பணிப்பாளர் சரத் வீரசிங்க, பாண்டிச்சேரி கலாநிதி ஞா.கோபி இங்கிலாந்ததைச் சேர்ந்த திருமதி சுகந்தி ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
(தற்போதைய அதிபர் T.சந்திரகுமார்)
1972 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 15ஆம் திகதியன்று, "கந்த கட்டி தமிழ் வித்தியாலயம்" எனும் பெயரால் அமரர் ஸ்ரீமான் நல்லதம்பிப் பிள்ளையின் நன்கொடையால் கந்தகட்டி தோட்டத்தில் 2 ஏக்கர் காணியில் இக்கல்விக் கூடம் உதயமாகியது.
பாடசாலை சமூகத்தை தமது தோள் மீதும் மார் மீதும் சுமந்து, இலக்கைநோக்கி நடந்தனர் இவர்கள். நாள் நேரம் பாராது கஸ்ட்ட நஷ்டங்களை கடந்து, முழுநாளும் பாடசாலையில் தம்மை அர்ப்பணம் செய்து கவனத்துடன் பணியாற்றினர்.
இவ்வித்தியாசாலையின் உயர்திரு நா.தர்மலிங்கம் அவர்கள்,முதலதிபர், திரு.நல்ல தம்பியா பிள்ளையின் கொடைத் தியாக வேள்வித் தீயில் நெய்விட்டு வளர்த்த ஒரு சாணக்கியராவார்.சுறுசுறுப்பு மிக்கவரான இவர் புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை தனது பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவர். கந்தகட்டியவிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கொஸ்கம எனும் சிங்கள மகா வித்தியாலயத்தில் இயங்கிவந்த தமிழ் பிரிவுக்கு அதிபராக கடமையாற்றியவர். கொஸ்கம சிங்கள மகா வித்தியாலயம் அந்த காலத்தில்,1972 இற்கு முன் இரு மொழி பாடசாலையாக இயங்கியது.
தமிழ்ப் பிரிவு மட்டும் எப்போதுமே எல்லாவற்றிலும் இரண்டாம் வரிசையிலேயே பயணிக்கவேண்டிய துர்பாக்கிய நிலையிலிருந்தது. மாற்றாந்தாய் மனப்பாங்கு, வளப் பற்றாக்குறை,பாகுபாடு ஆகியன அங்கே கடமையிலிருந்த அதிபர் திரு தர்மலிங்கம் அவர்களை, பல சந்தர்ப்பங்களில் வெகுவாக பாதித்து அவரை கூனிக்குறுகச் செய்தது.
தனியாக ஒரு தமிழ் மொழி பாடசாலையின் அவசியத்தை இலட்சியமாக்கி, தமிழ் சமூகத்திற்கொரு தனியான கல்விச்சாலை அமைத்திட வேண்டும் என்பதில், கவனத்தை செலுத்தி தன்னாலான எல்லா முயற்சிகளையும் விடாது தொடர்ந்து செய்துவந்தார். அவரின் அர்ப்பணிப்பு மிக்க இந்த சிந்தனைக்கு, உதவுமுகமாக கொஸ்கம பிரதேசத்திற்கு அருகில் உள்ள, கங்கை விநாயகர் ஆலயத்தை தளமாகக் கொண்டு வாழும் உலுகங்கை நகர வர்த்தகர்களான சி.த.தங்கவேல் பிள்ளை(STM),திரு. பழனியாண்டி பிள்ளை , திருவாளர் செல்லத்துரை , திரு பிச்சை பிள்ளை , திரு சோமசுந்தரம் , ( லியாங்களை) கம்பிகாரர் என்று அழைக்கப்படும் நக்கள்ஸை சேர்ந்தொருவர் திரு தங்கராசு,திரு நல்லதம்பி பிள்ளை அவர்கள், திரு மாயாண்டி ஆகியோரின் பலம் மிக்க உதவி ஒத்தாசைகளுடன், அமரர் நல்லதம்பியா பிள்ளை கல்வித் தானத்தை இந்திய வம்சாவளி தமிழ் சமுதாயத்தினருக்கு கையளித்தனர்.
முதல் அதிபர் திரு தர்மலிங்கம் இவ்வாறான ஒரு தனித்தமிழ் பாடசாலையை உருவாக்கும் பொருட்டு பல்வேறு பிரயத்தனங்களைசெய்து, அரச காரியாலயங்கள், பெரும்பான்மை சமூகத்தினர், அரசியல் சூழ்ச்சிகள் என பல திசைகளிலுமிருந்து வரும் எதிர்ப்புகளுக்கும் அரசவூழியர் எனும் வகையிலும்,வேற்று பிரதேசத்தை சேர்ந்தவர் என்ற வகையிலும் முகம்கொடுக்க வேண்டியவரானார்.
இந்த தீவிர போக்குகளுக்கு மத்தியில் எப்படியாகிலும், "ஒரு தனி தமிழ் பாடசாலை"யை அடையும்பொருட்டு, பகீரதப் பிரயத்தனம் செய்தார்.
அதன் பிரகாரம் 1972 புரட்டாதி 15 ஆம் நாள் கொஸ்கம வித்தியாலயத்திலிருந்து தனது 72 தமிழ் மாணவர்களுடன், தனது பயணத்தில் வெற்றி வாகை சூடி, கந்தகட்டி தமிழ் வித்தியாலயத்தை பொறுப்பேற்று மாபெரும் புதிய வரலாற்றை பதிவு செய்தார்.
1972 முதல் இது நாள் வரை கந்தகட்டி பாடசாலையினது அதிபர் ஆசனத்தில் 12 அதிபர்கள் பயணித்துள்ளனர்.
அதிபர் தர்மலிங்கம் அவர்களின் ஓய்வுக்குப்பின், பாடசாலையில் கணித ஆசிரியராக இருந்த திரு.சொலமன் ஆசிரியர் அவர்கள் பதில் கடமை அதிபராக பொறுப்பேற்றார். பின் 74 ஆம் ஆண்டு இறுதி தவணையில் புதிய அதிபராக,திரு. யோகராஜா அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்.ஆனால் அதிபர் திரு யோகராஜா அவர்கள் சுகயீனம் காரணமாக 75ஆம் ஆண்டே இடமாற்றம் பெற்று யாழ்ப்பாணம் செல்கின்றார்.
மீண்டும் 75 ஆம் ஆண்டு ஆசிரியர் திரு.சொலமன் அவர்கள் பதில் கடமை அதிபராக நியமிக்கப்படுகிறார். இந்தக் காலப்பகுதியில் ஒரு நள்ளிரவில் இனம் தெரியாதவர்களால், 10 × 20 அளவு பாடசாலை காரியாலயத்தின் பலகை அலுமாரியை உடைத்து அனைத்து மாணவர்களின் கோப்புகள், மற்றும் தஸ்தாவேஜுகள் திருடப்பட்டிருந்தன திருடப்பட்ட பொருட்கள் ஒரு வாரத்துக்குப் பின் அருகில் உள்ள ஓடையில் அது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்களின் பிறப்புச் சான்றிதழில் எழுதப்பட்டிருக்கும் விவரங்கள் யாவும் அழிந்துபோய், ஊறிய வெறும் காகிதங்களாக காணப்பட்ட, கோப்புகள் காயவைக்கப்பட்டு மீண்டும் அதே பலகை அலுமாரியில் அடுக்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்குப் பின் 75ஆம் ஆண்டு மறுத் தவணையிலேயே ஆசிரியர் திரு. பாலசிங்கம் அவர்கள், பதில் கடமை அதிபராக நியமிக்கப்பட்டார். ஓரிரு மாதங்களில் தமிழ் ஆசிரியர் திரு. நாமதேவன் அவர்கள் பதில் கடமை அதிபராக திரு பாலசிங்கம் அவர்களுக்கு பதிலாக தெரிவு செய்யப்படுகிறார். திரு.நாம தேவன் அவர்கள் தொடர்ந்து 1976ஆம் ஆண்டு முதல் தவணை முடியும் வரை பதில் கடமை அதிபராய் பாடசாலையை நடாத்தி வந்தார்.
1976 ஆம் வருடம் இரண்டாம் தவணையிலிருந்து நிரந்தர அதிபராக, அப்போது ஆகலை தமிழ் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய திரு பொன். பூபாலன் அவர்கள் கந்தகட்டி தமிழ் வித்தியாலயத்திற்கு, புதிய அதிபராக நியமனம் பெற்று பதவி ஏற்கின்றார். ஆகலை வித்தியாலயத்தில் திருமதி. வெரோனிக்கா பூபாலன் அவர்கள் அதிபராகநியமனம் பெறுகிறார்.
1976 ஆம் ஆண்டுக்குப்பின் கந்தகட்டி பாடசாலை பல புதிய பரிமாணங்களில் வடிவம் எடுக்கத்தொடங்குகின்றது. கல்வி மற்றும் இணைப்பாட செயற்பாடுகள் விருத்திப்பெருகின்றன. கலைத்துறையில் நாடகம், நாட்டுக்கூத்து, வானொலி நிகழ்ச்சிகளில் தொடர்பும், பங்கும் கொள்ளுதல் என்பன இடம்பெறுகின்றது.
பாடசாலைக்கு அரச விருந்தினர்களாக மந்திரிமார்கள் வரத்தொடங்கினர். வத்தேகம தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஏ.ஜீ .பெர்னாந்து, மற்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் கௌரவ டி.பி வேரபிட்டிய அவர்கள், அமைச்சர் கௌரவ சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள். என தேசிய அளவிலான தொடர்புகள் பாடசாலைக்கு கிடைக்கின்றன.
1977 ஆம் வருடம் அதிபர் அவர்களின் ஆகலை பாடசாலை விடுதியில் வைத்து ஆகலை சிற்பக் கலைஞர் அமரர் பி. கே. சுகுமார் அவர்களால் ஊதா நிற கொடியில், பொன் நிற எழுத்துக்களால் வரையப்பட்டது. கந்தக் கட்டி பாடசாலைக்கு பாடசாலை கீதம், பாடசாலைக் கொடி, பாடசாலை இலச்சினை, மற்றும் பாடசாலை மகுட வாசகம் என்பன அமைக்கப்பட்டு அரச பாடசாலை என்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது.
கந்த கட்டி தமிழ் வித்தியாலயம், "கந்தகட்டி தமிழ் மகா வித்தியாலயம்" என அங்கீகரிக்கப்பட்ட நல்ல செய்தியை பிரதிப் பாதுகாப்பு அமைச்சரான கௌரவ டி.பி வேர ப்பிடிய அவர்கள் நேரடியாகவே பாடசாலைக்கு விஜயம் செய்து அறிவித்தார்.
1988ஆம் ஆண்டு அதிபர் பொன் பூபாலன் அவர்கள் இடமாற்றம் பெற்று செல்கிறார். புதிய திருமதி பி.சி மலர். அவர்கள் நியமனம் பெற்று வருகிறார். அதிபர். பி.சி மலர் அவர்கள் 1991ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்றுச் செல்கிறார். அந்த வெற்றிடத்துக்கு மீண்டும் அதிபர் பொன் பூபாலன் அவர்கள் நியமனம் செய்யப்படுகின்றார். தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு வரை கந்த கட்டி தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் பதவியை அதிபர் பொன் பூபாலன் அவர்கள் அலங்கரிக்கிறார்
கந்த கட்டி பாடசாலைக்கு மேலும் 100× 20 கட்டிடம் ஒன்றும் 50× 20 மனையியல் கட்டிடம் ஒன்றும் கட்டப்படுகிறது.
பின்னாளில் அதிபராக நியமனம் பெற்று வந்த திரு செ.தியாகநாதனின் வருகை பாடசாலைக்கு புதிய ஒரு இரத்தம் பாய்ச்சியது ,உயர்தர வகுப்பிற்கு பிரவேசிக்கும் மாணவர்களின் தொகை சடுதியாக உயர்வடைந்து சென்றது.ஆசிரியர் பற்றாக்குறை உச்சத்திலிருந்தபோது சகலருக்கும் கற்பித்தலை சமமாக அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு மாணவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார்.
அப்போதிருந்த ஏனைய பழைய மாணவர்களுடன் வீடு வீடாகச் சென்று நல்ல தரமான புத்தகங்களைத் திரட்டி, பாடசாலை மனையியல் கட்டிடத்தில் 20 ×10 அறையில் ஒரு நூல் நிலையத்தை அமைத்து பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது. நூலகம் அமைக்கப்பட்டதன் பின் உற்சாகம்கொண்ட பழைய மாணவர்களால் பாடசாலையின் பணிகள் பல கையேற்கப்பட்டு விரைவுபடுத்தப்பட்டது. திரு.ம.தேவராஜ், திரு.லாசரஸ், திரு N.சந்திரகுமார் போன்றோர் தனவந்தர்களின் உதவிகளைப் பெற்று வளம் சேர்த்தனர். ஊர் மனைகள் தோறும், சென்று நிதி திரட்டி சாலைக்கு என ஒரு பேண்ட் வாத்திய இசைக்கருவிகள் சுமார் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் பெறுமதியில் வாங்கப்பட்டு பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
பின்னர் பாடசாலையைப் பொறுப்பேற்ற பொன் இராஜகோபால் அவர்கள் பாடசாலைக்கு பாரியதோர் அடையாளம் தந்தார்.இவர் காலத்தில் தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் விருதுகளைத் தட்டிக்கொண்டு சூழல் நேயச் செயற்பாடுகளிலும் புறக்கிருத்தியச் செயற்பாடுகளிலும் கல்விச்செயற்பாடுகளிலும் புதிய பாதையில் பயணித்து மலர்ச்சியடைந்து தேசியத்தில் முத்திரை பதித்தது.
2016 ஆம் ஆண்டின் பின்னர் பாடசாலையைக் கையேற்ற T.சந்திரகுமார் அவர்கள் மாகாண மட்ட உற்பத்தி திறன் போட்டியில் பாடசாலைக்கு கீர்த்தியைப் பெற்றுக் கொடுத்து தமிழ் மொழித் தினப்போட்டிகளிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் கல்விப் பேற்றிலும் முன்னேற்றம் பெற்றுச் செல்கிறது.
2019 ஆம் ஆண்டின் பின்னர் கந்தகட்டி ஆரம்பப் பாடசாலை உதயமாகி அதிபர் பொன்னையா ஜமுதராஜாவின் முனைப்பான பணியில் முன்னகர்கிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் 30 இற்கும் மேற்பட்ட பல்கலைக் கழக மாணவர்கள் பல்துறை சாதனையாளர்கள் பண்பாளர்கள் என பலரையும் உருவாக்கி நிலகமகளுக்கு அணி சேர்க்கிறது ஒப்பற்ற கந்தகட்டி தேசிய பாடசாலை
பொன் விழா பெருவிழா காண தலைமைப் பொறுப்பிலிருந்து பழைய மாணவர்களான முன்னைநாள் அதிபர்கள் , செ.தியாகநாதன் செயலாளராக பொன் இராஜகோபால் பொருளாளராக நக்கல்ஸ் தமிழ் வித்தியாலய அதிபர் மு. சிவகுமார் போசகராக தி.சந்திரகுமார் ஆலோசகராக ம.தேவராஜ் உள்ளிட்ட குழுவினர் பகீரதப் பிரயத்தனத்தோடு முனைந்து செயற்படுகின்றனர். பழைய மாணவர்களையும் நலன் விரும்பிகளையும் பாடசாலை அபிவிருத்தி சார் பல் துறை சார்ந்தவர்களையும் இணைக்கும் பாலமாக இந்நிகழ்வு அமையவிருக்கிறது.
பாடசாலையின் வரலாற்றுத் தொகுப்பாகவும் பழைய மாணவர்களின் ஆக்கங்களின் தொகுப்பாகவும் அமைந்த நூலொன்றும் முன்னைநாள் அதிபர் பொன் இராஜகோபாலின் தொகுப்பில் வெளியிடப்படவுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
43 minute ago
56 minute ago
1 hours ago