2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கற்பக விநாயகர் ஆலய விவகாரம்: அனுமதி கிடைத்தது

ஆ.ரமேஸ்   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாநகரத்தில், கற்பக விநாயகர் ஆலயத்தை நிர்மாணிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, ஆலயத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தை நிர்மாணிப்பதற்கு, மாநகர சபை மேயர் சந்தனலால் கருணாரத்ன,  தடைகளை ஏற்படுத்தி வந்த நிலையிலேயே, தற்போது, ஆலயத்தை நிர்மாணித்து முடிப்பதற்கு, அனுமதி வழங்கியுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சிவன்ஜோதி யோகராஜ், இது தொடர்பாக, நேற்று முன்தினம் (14) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே, இவ்விடயத்தை வெளிப்படுத்தினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், மாநகர சபை மேயர், கடந்த வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற, மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தின் போதே, இந்த அனுமதியை வழங்கினார் என்றும், ஓரிரு வாரங்களில், எழுத்துமூலமான அனுமதியையும் வழங்குவார் என்றும், அவர் நம்பிக்கை ​வெளியிட்டார்.

100 ஆண்டுகள் பழமையான அம்மன் ஆலயம் இருந்த இடத்தில், கற்பக விநாயகர் ஆலயத்தை அமைப்பதற்கு, நுவரெலியா வாழ் இந்து மக்களால் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர், இந்த ஆலயத்தை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில், நுவரெலியா மாநகர சபையின் மேயராகத் தெரிவு செய்யப்பட்ட சந்தனலால் கருணாரத்ன,  இதற்கான அனுமதியை இரத்துச் செய்திருந்தார்.

மேலும், ஆலயம் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்றால், அதற்கான சில விதிமுறைகள் விதிக்கப்பட்டு, உடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இதற்கு, பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

இந்நிலையிலேயே, இந்த ஆலயத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .