Janu / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா கிரிகரி வாவியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து, படகு சேவைகளை முறையான ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வணிகசேகர தெரிவித்துள்ளார்.
கிரிகரி வாவியில் சுமார் 120 சுற்றுலா படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து, படகு உரிமையாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அவசரமாக அழைக்கப்பட்டு புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டாயம் பாதுகாப்பு அங்கிகளை (Life Jackets) அணிவித்தல், படகுகளின் வேகத்தைக் கட்டுப்படுத்துதல், ஒழுக்கமான முறையில் பாதுகாப்பான பயணங்களை முன்னெடுத்தல் போன்றவை வலியுறுத்தப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல், இரண்டு சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகொன்று, எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு படகுடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனினும், படகிலிருந்த இரண்டு சுற்றுலா பயணிகளும் அதன் ஓட்டுநரும் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இவ்விபத்து தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த நுவரெலியா பொலிஸார், சம்பந்தப்பட்ட இரண்டு படகோட்டிகளையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர். இவர்களுக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை, விபத்தின் போது சுற்றுலா பயணிகளின் இரண்டு கைபேசிகள் வாவியில் விழுந்து காணாமல் போயுள்ளன. அவற்றுக்கான இழப்பீட்டை (நட்டஈடு) சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்க படகு உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் குறித்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
எச்.எம்.சுதத் ஹேவா

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .