2025 மே 08, வியாழக்கிழமை

‘குடும்ல நல சுகாதார தாதிகளின் பணிப்பகிஷ்கரிப்புக்கு தீர்வு தரவும்’

Gavitha   / 2020 நவம்பர் 05 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

ஊவா மாகாண குடும்ப நல சுகாதாரத் தாதிகள், மாகாண வைத்திய அதிகாரி அலுவலகக் கடமைகளுக்குச் செல்வதைப் பகிஸ்கரித்து வருகின்றமையால், மாதாந்தச் சிகிச்சைகளுக்காக வரும் கர்ப்பிணிப்பெண்கள, தாய்மார்கள, சிறு குழந்தைகள் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்து வருவதாகவும் எனவே, இந்தப் பணிப்பகிஷ்கரிப்புக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசாமிலுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு, கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வருவதாகவும் இதனால், பலர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊவா மாகாண குடும்ப நல சுகாதாரத் தாதிகளுக்குச் செழுத்தப்பட வேண்டிய  போக்குவரத்து செலவுப்பணம், முற்பணம், அரசாங்கத்தால் வழங்கத் தீர்மானிக்கப்பட்ட “கொரோனா” தொற்று நீக்கும் கடமைகளுக்கானக் கொடுப்பனவுகள் ஆகியனவற்றை வழங்க, ஊவா மாகாண சுகாதார சேவைத் திணைக்களம் நடவடிக்கை எடுக்காமையைக் கண்டித்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட கொடுப்பனவுகள், ஏனைய மாகாணங்களின் சுகாதார சேவை திணைக்களங்களால் கிரமமாக வழங்கப்படுவதாகவும் எனினும்,   ஊவா மாகாண சுகாதார சேவைத் திணைக்களத்தினர், ஊவா மாகாண குடும்ப நல சுகாதாரத் தாதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகளை, வேறு வேலைத்திட்டங்களுக்குப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் இதனாலேயே, தாதிகளுக்குச் செழுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் உள்ளது எனத் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக, குடும்பல நல சுகாதார தாதிகள், ஆளுநரின் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு ஏற்கெனவே கொண்டு வந்தபோதிலும் இதுவரைக்கும் அதற்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றும் எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்தி, இந்தப் பணிப்பகிஷ்கரிப்புக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இக்கடிதத்தின் பிரதிகள், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, தலைமையகச் சுகாதார பணிப்பாளர் நாயகம், ஊவா மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X