2025 மே 08, வியாழக்கிழமை

குணமடைந்தோரை தனிமைப்படுத்த மத்திய நிலையம்

Kogilavani   / 2020 நவம்பர் 06 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

சப்ரகமுவ மாகாணத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரை தொடர்ந்து 14 நாள்கள் தனிமைப்படுத்தி வைப்பதற்கு புதிய தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் கொரோனா தொற்று ஒழிப்புக் குழுவின் ஒருங்கிணைபுக்குழு கூட்டம், நேற்று முன்தினம் (4) மாலை இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், 'கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்த பின் அவர்களை மேலும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார பிரிவின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இதற்கமைய குணமடைந்த தொற்றாளர்களை மேலும் 14 நாள்கள் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தாது அதற்கென இரத்தினபுரி புஸ்ஸல்ல பயிற்சி நிலையம் தனிமைபடுத்தல் நிலையமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு அவர்களை தனிமைபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

'இதற்கு மேலாக, கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸாரை தனிமைபடுத்துவதற்காக பலாங்கொடை ரஜவக்க பிரதேசத்தில் அமைந்துள்ள மாகாண விவசாயப் பயிற்சி நிலையம் பெற்றுகொடுக்கப்பட்டுள்ளது' என்று, சப்ரகமுவ  மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மேலும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த இரத்தினபுரி மாவட்ட கொவிட் 19 தொற்று தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுனர் லக்மால் கோனார,  
இரத்தினபுரி மாவட்டத்தில் 78 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

இதனடிப்படையில் எயலியகொடை பிரதேசத்தில் 28 பேரும் இரத்தினபுரி பிரதேசத்தில் 15 பேரும், குருவிட்ட பிரதேசத்தில் 8 பேரும், அயகம பிரதேசத்தில் 9 பேரும், கிரியெல்ல பிரதேசத்தில் 10 பேரும், எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் 3 பேரும், காவத்தை பிரதேசத்தில் 2 பேரும், எலபாத்த பிரதேசத்தில் 2 பேரும், கொடக்கவெல பிரதேசத்தில் ஒருவரும் மொத்தம் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படித் தொற்றாளர்களில் 42 பேருக்கும் அதிகமானோர் பேலியகொடை மீன் சந்தை பகுதியுடன் தொடர்பு உள்ளவர்கள் எனவும் 2 பேர் பிரண்டெக்ஸ் ஆடைத்தொழிற்சாலையுடன் தொடர்புடையவாகள் எனவும், 11 பேர் ஹொரண   ஆடைத்தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்கள் எனவும், 3 பேர் கொழும்பு துறைமுக பகுதிகளில் தொடர்புடையவர்கள் எனவும், 12 பேர் துறைமுக பகுதிகளை அண்மித்த பகதிகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் 4,255 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பி.சி.ஆர் பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகின்றது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X