2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

குறைந்தபட்ச வேதனம்: ‘சட்டம் இருந்து என்ன பயன்?’

Gavitha   / 2021 ஜனவரி 05 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இருந்தும், நாடாளுமன்றத்தின் ஊடாக, அது ஏன் முன்னெடுக்கப்படுவதில்லை என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குள்வியெழுப்பியுள்ளார்.

'குறைந்தபட்ச வேதனங்கள்' (இந்திய தொழிலாளர்கள்) சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் தொடர்பான ஆலோசனைக்குழுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், நேற்று (04) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  குறைந்தபட்ச சம்பளமானது நாடாளுமன்றத்தின் ஊடாக நிர்ணயிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

வேலைக்கு ஆள்களைச் சேர்க்கும் வயதெல்லையை,15 இல் இருந்து 16 ஆக அதிகரிப்பதற்காகவே, மேற்படி சட்டதிருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த ஏற்பாட்டை வரவேற்றாலும், இச்சட்டம் நடைமுறைக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்படாமை தவறாகும் என்றும் தெரிவித்தார்.

“14 வயதுக்கு குறைந்தவர்களுக்கு, அரிசி மானியம் வழங்கப்படவேண்டும் என, முன்பு குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஏற்பாடும் திருத்தப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் அரிசி மானியம் என்பது இல்லை. இதை வழங்காத பட்சத்தில், 100 ரூபாய் தண்டப்பணம் என்பதும் உள்ளது. இவை தற்போதைய நிலைக்கேற்ப மாற்றப்படவில்லை. எனவே, முழுமையானதொரு திருத்தம் அவசியம்” என்றும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
அதேவேளை, குறைந்தபட்ச வேதனத்தை நிர்ணயிப்பதற்கான சட்ட ஏற்பாடு இருந்தும், நடவடிக்கைகள் யாவும் இதுவரை மூடிமறைக்கப்பட்டே முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ள அவர், எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை, நாடாளுமன்றமே இனி நிர்ணயிக்கவேண்டும் என்றும் மேலும் வலியுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X