Kogilavani / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம், இரண்டு தோணிகளில் கால்வைத்தக் கதையாகி உள்ளதாக, நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், ஆயிரம் ரூபாய் நாட்சம்பளம் தொடர்பில் சம்பளநிர்ணய சபை எடுத்த முடிவுக்கு, கம்பனிகள் இணங்கவில்லை என்பது அவர்கள் அதனை எதிர்த்து வாக்களித்ததில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது என்றும் மேலும் 14 நாள் கால அவகாசத்தைப் பயன்படுத்தி அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்குச்; செல்லலாம் என்றும் தெரிவித்தார்.
மறுபுறம் 1,000 ரூபாய் நாட்சம்பளத்தைப் பெற்றுக்கொடுத்துவிட்டதாக அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கொண்டாடினாலும் அடுத்துவரும் மாதங்களில் அந்த சம்பளத்தை மாதாந்தம் பெறும் தொழிலாளர்கள் வாயிலாக அதன் உண்மைத் தன்மை வெளிப்படும் என்றும் தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும், கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்த கூட்டுஒப்பந்த முறைமை கேள்விக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் இது என்றவகையில், தோட்டத் தொழிலாளரின் சம்பள விவகாரம் இரண்டு தோணிகளில் கால்வைத்தக் கதையாகி உள்ளதாக விமர்சித்தார்.
சம்பள நிர்ணய சபை ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தைத் தீர்மானிக்கும் முறைமை புதியதல்ல என்றும் கூட்டுஒப்பந்தம் மூலம் தீர்மானிப்பதான ஒரு முறைமை வந்தவுடன், அந்த முறைமை கிடப்பில் போடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தற்போது மீண்டும் சம்பள நிர்ணயச் சபையினூடக தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் முறைமைக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாகவும் ஏனெனில் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரமும், ஆண்டின் இறுதியில் பிரதமர் வரவு-செலவுத் திட்டத்தில் விடுத்த அறிவிப்பும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரவில்லை என்றும் தெரிவித்தார்.
'அது அரசாங்கத்துக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்த நிலையிலேயே, சம்பளநிர்ணய சபையின் ஊடாக தீர்மானிப்பதற்கு தொழில் அமைச்சர் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளனர்.
'இதனை கம்பனிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவு. அவர்கள் தமது ஆட்சேபனையைத் தெரிவிக்க 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தங்களது தீர்மானத்தை வெளியிட்டு அதனை ஏற்று நடைமுறைப்படுத்த கம்பனிகள் நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர்கள் வழங்கும் வேலை நாட்களைக் குறைக்க வாயப்பு உள்ளது.
'எனவே அது தொழிலாளர்களின் மாத வருமானத்தைக் குறைக்க வல்லது. இதனால், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை மாற்றுவடிவில் வெளிவரும். இதன்போது அரசாங்கமும் தொழிற்சங்கங்ளும் மேலும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கும் தேவை எழும்.
'சம்பள நிர்ணயச்சபையில் தீர்மானத்துக்கு இணங்காவிட்டால் கம்பனிகள் தோட்டத்தை விட்டு வெளியேறலாம் என தொழில் அமைச்சர் சபையில் தெரிவிக்கிறார். எனவே கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட போவது இல்லை' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
10 minute ago
11 minute ago
15 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
15 minute ago
22 minute ago