2026 ஜனவரி 21, புதன்கிழமை

சிறார்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்கத் தீர்மானம்

R.Maheshwary   / 2021 ஜூலை 26 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மலையக சிறார்கள் கூலி வேலைக்கு அமர்த்தப்படுவதை தடுப்பதற்கும், அவர்களுக்கான கல்வி உரிமையை உறுதிப்படுத்தி வளமானதொரு எதிர்காலத்துக்கு அடித்தளமிடுவதற்கான தேசிய பொறிமுறையை உருவாக்கி அதனை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு கண்டியில் இன்று  (26) நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.


அரசியல் பிரமுகர்கள், பாதுகாப்பு தரப்பு, அரச சார்பற்ற பிரதிநிதிகள், பெண்கள் மற்றும் சிறார்களுக்கான குரல் எழுப்பும் தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வதேச மட்டத்திலான பிரதிநிதிகள், புத்திஜீவிகள் ஆகியோரின் உதவியுடன் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த வேண்டும் எனவும், நகர மற்றும் தோட்டப்புற இளைஞர்கள் வலயமைப்பையும் இதில் உள்வாங்க வேண்டும் எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பேராசிரியர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற அமைப்புகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஹிஷாலினியின் மரணம்போல் மீள் நிகழாமல் இருப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், கடந்தகாலங்களில் இழைக்கப்பட்ட தவறுகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.


மலையக சமூதாயம் இன்னமும் முழுமையாக தேசிய பொறிமுறைக்குள் உள்வாங்கப்படாமையால் வறுமை உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்கின்றன. சிறார்கள் பாடசாலைகளை விட்டு இடைவிலகி வேலைக்கு செய்வதற்கு இதுவும் ஒரு பிரதான காரணம். அதேபோல மலையக சமூதாயத்தை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கும், உரிமை மற்றும் அபிவிருத்தி அரசியலை சமாந்தரமாக முன்னெடுப்பதற்கும் உரிய அரசியல், தொழிற்சங்க தலைமைத்துவம் வழங்கப்படவில்லை என கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் சிலர் சுட்டிக்காட்டினர்.

எனவே, மலையக சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை தடுத்து, அவர்களின் கல்வி உறுமையை உறுதிப்படுத்தி வளமானதொரு அடித்தளத்தை உருவாக்குவதற்கான தேசிய பொறிமுறையை உருவாக்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அப்பொறிமுறை எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் கருத்துகளை உள்வாங்குவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X