2025 மே 03, சனிக்கிழமை

‘சுற்றுநிரூபத்தைப் பின்பற்றாத கல்வி அதிகாரிகள்’

Gavitha   / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், துவாரக்ஷன்

கல்வித் திணைக்களங்கள் இருந்தும் சுகாதார அமைச்சில் இருந்தும் அனுப்பப்படுகின்ற சுற்றுநிரூபங்களை, கல்வி அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என, தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

தலவாக்கலையில், நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பாலசேகரம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மூன்றாம் தவணைக்காக, பாதுகாப்பான முறையில் பாடசலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம், கல்வி அதிகாரிகளுக்கும் பாடசாலை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்பான விழிப்புணர்வும் தெளிவூட்டலும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்படாமல் இருப்பதும், அவர்களே அதை முறையாக பின்பற்றாமல் இருப்பதும் கவலைக்குரியதே என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஆசிரியை ஒருவரை, கட்டாயப்படுத்தி பாடசாலைக்கு வரவழைத்ததன் விளைவாக, அங்குள்ள ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியதுடன், பாடசாலையை மூட வேண்டிய துர்பார்க்கிய நிலையும் ஏற்பட்டது என்றும் அவர் கூறினார்.

மேலும், கல்வி அமைச்சின் செயலாளர் அண்மையில் வெளியிட்ட சுற்று நிரூபத்தில், ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களை, விசேடத் தேவையின்றி பாடசாலைக்கு உள்வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும்  அவர்களுக்கு விசேட விடுமுறை வழங்கும்படியும் குறிப்பிட்டிருந்த போதிலும்  இந்தச் சுற்று நிரூபத்தை மீறும் வகையில், சில அதிபர்கள் செயற்படுகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எவ்வித தேவைப்பாடும் இன்றி, ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் அனைவரையும், பாடசாலைக்கு வரவழைத்து, காலை முதல் மாலை வரை, பாடசாலையில் வைத்திருப்பது தொடர்பாக, ஆசிரியர்கள் தொடர்ந்தும் தங்களுக்கு அறியப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

எனவே, சுற்று நிரூபங்களை முறையாக பின்பற்றாத பட்சத்தில், எதிர்காலத்தில் கல்வித் துறையில் பாரிய பின்னடைவு ஏற்படுவதற்கான சாத்தியகூறுகளைக் கவனத்தில் கொண்டு, நடந்துகொள்ளவேண்டும் என்று தாங்கள் வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X