2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு விசேட பொலிஸ் குழுக்கள் ரோந்து

Freelancer   / 2023 மார்ச் 30 , மு.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, மாவட்டத்துக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கை  ஒன்றை  அமுல்படுத்த கண்டி பொலிஸார் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 விசேட பொலிஸ் குழுக்கள் பல, தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கண்டி மாநகரம் மற்றும் நகரப்பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுமென மத்திய மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

கடந்த சில வாரங்களாக கண்டிக்கு வருகை தந்த  சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த பல்வேறு அசம்பாவிதங்கள் குறித்து அவதானம் செலுத்தி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், அதற்கமைவாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை துன்புறுத்திய குடிபோதையில் இருந்த வழிகாட்டிகள் பலர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

நாட்டின்  பொருளாதார நெருக்கடியின் பின்னர் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கண்டி நகருக்கு வருகை தருவதாகவும் அவர்களில் பலர் இரவு நேரங்களிலும் நகரில் சுற்றி திரிவதாகவும் அவர் கூறினார்.

 முச்சக்கர வண்டிகள் மற்றும் ஹோட்டல்களில் சில சுற்றுலாப் பயணிகள் துன்புறுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சுற்றுலா வழிகாட்டிகளினால் அதிகளவில் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ஒழுங்குபடுத்துவதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு மத்திய மாகாண ஆளுநர், வெளிவிவகார அமைச்சு மற்றும் சுற்றுலா அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேரலும் தெரிவித்தார்.

எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக ரோந்துப் பணிகளை மேற்கொள்வது போன்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியுமெனவும்,  சம்பந்தப்பட்ட வழிகாட்டிகள்  ஒன்றிணைந்து இந்த ஒழுங்குமுறைத் திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும்   மஹிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .