2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

ஜீவனுக்கு ‘ஆடு‘ தெரியாதாம்

Editorial   / 2024 ஏப்ரல் 17 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில் ஆடு வளர்ப்பினை ஊக்கப்படுத்த முதல் கட்டமாக 25 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடா மறி இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள 25 பயனாளிகள்  தலா ஒருவருக்கு ஒரு கடாவும் இரண்டு மறிகளுமாக 75 ஆடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பயனாளிகளின் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தைப்பொங்கல் தினத்தில் குறித்த ஆடுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தன. எனினும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளின் தாமதமான செயற்பாட்டினால் இதுவரை பயனாளிகளுக்கு ஆடுகள் சென்றடையவில்லை.

இந்த நிலையில் பயனாளிகள் 75 பேருக்கு வழங்குவதற்காக ஒரு தொகை ஆடுகள் லொறி ஒன்றின் ஊடாக கொட்டக்கலை (சி எல் எப் )க்கு செவ்வாய்க்கிழமை (16) கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள ஆடுகளுக்கு முறையான பணம் வழங்கப்படவில்லை என்பதை காரணம் காட்டி அன்றையதினம் (16) மாலை ஆடுகளை ஏற்றி வந்த லொரியை மடக்கி  சிலர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதுடன் லொரிக்குத் தீ வைக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

இதனால் கொட்டகலையில் சிறு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. விரைந்து செயற்பட்ட சில அதிகாரிகள் பதற்றத்தை தணித்தனர்.

ஆடு விவகாரம் தொடர்பாக,  சம்பந்தப்பட்ட தரப்பினரிடத்தில் வினவிய போது  ஆடுகள் வழங்க பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் ஊடாகவே இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்க தாமதம் ஏற்பட்டது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த அதிகாரி பயனாளிகள் விரும்பும் வகையில் தரமான ஆடுகளை அவர்களுக்கு வழங்க வேண்டும் அதே நேரத்தில் இது  அரசாங்க வேலைத்திட்டமாகும் ஆகவே, பல்வேறு சட்டத்திட்டங்கள் உள்ளதால் அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அனைத்து விடயங்களும் பார்த்த பின்பே பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படவுள்ளன என்றார். 

மேலும் ஆடுகளுக்கான பணத்தை வழங்கும் முன் ஆடுகளின் தரப்  சோதனை உள்ளிட்ட நிறை மற்றும் ஆவண  சோதணை என பல  சோதனைகள் காணப்படுவதாகவும் இது அனைத்தும் அரசாங்க சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டதாக சரியாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆடுகளை  விநியோகத்தவர்களுக்கு  பணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேநேரத்தில் ஆடுகளை பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் கால தாமதம் குறித்து எமக்கு எந்தவோர் முறைப்பாடுகள் செய்யவில்லை என தெரிவித்த அந்த அதிகாரி இந்த ஆடுகள் வழங்கும் திட்டத்தை குழப்ப நினைப்பவர்கள் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

ஆனால், குறித்த 75  பயனாளிகள் பிரதேச கால்நடைகள் வைத்தியசாலை மற்றும் திணைக்கள அதிகாரிகளினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று சொல்லுகின்ற போதிலும் இவர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர் என்ற குழப்ப நிலையும் உள்ளது.

அத்துடன் இந்த ஆடுகளை கொள்வனவு செய்த விடயத்திலும்  பல குளறுபடிகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் இந்த விடயம் தொடர்பில் தற்பொழுது சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதுடன் இந்த ஆடுகள் வழங்கும் திட்டத்தில் திணைக்களங்கள் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள்,   பிரச்சினைகள் எதுவாக இருப்பினும் பதில் வழங்க வேண்டும்.

ஆனால், இந்த திட்டத்துக்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த ஆடு வழங்கும் திட்டம்  நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு மற்றும் கால் நடைகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் திணைக்களங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் ஒரு அரச வேலைத்திட்டமாகும்  என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X