2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

“டயஸ்போராவைக் கண்டு அச்சங்கொள்ளாதீர்கள்”

Yuganthini   / 2017 ஜூன் 14 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்

“டயஸ்போராவைக் கண்டு அச்சங்கொள்வதை விடுத்து, அவர்களது உழைப்புகளையும் நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும்” என்று, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“யுத்தம் காரணமாக நாட்டைவிட்டு வெயியேறிய புலம்பெயர்ந்த (டயஸ்போரா) தமிழர்களின் உதவிகளை பெற்று,  இந்த நாட்டை மாத்திரமல்ல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்.  நாட்டில் டயஸ்போரா என்றால், மக்கள் மத்தியில் அச்ச நிலையொன்று இருந்து வருகின்றது. அந்த நிலைமை மாறி, டயஸ்போராவையும் நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும்” என்றும், அவர் கூறினார்.

இரத்தினபுரி, அயகம பிரதேச செயலகத்துக்கு  உட்பட்ட அயகம கல்விக் கோட்டத்தில்,  வெள்ளதால் பாதிக்கப்பட்ட 1,200 மாணவர்களுக்கு,  கற்றல் உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு, அயகம ராகுல வித்தியாலயத்தில் நடைபெற்றது.   

லண்டனில் இயங்கிவரும் சிறுவர் வறுமை நிவாரண நிதியத்தின் தலைவர் கலாநிதி சர்வேஸ்வரன் வேலாயுதம் மற்றும் ஹென்றி அமலராஜ் ஆகியோரின் உதவியுடன், “புனர்வாழ்வும் புது வாழ்வும்” என்ற தொனிபொருளின் கீழ், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,

“அயமகவில் ஏற்பட்ட அனர்த்தத்தினால், நான்கு மதங்களையும் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டனர். இயற்கை அழிவு என்பது,  அனைவருக்கும் பொதுவானதே.  இதனை உணர்ந்து,  நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.

வடக்கில் அனர்த்தம் ஏற்பட்டால் தெற்கில் உள்ளவர்கள் உதவிசெய்ய வேண்டும் தெற்கில் அனர்த்தம் ஏற்பட்டால் வடக்கில் உள்ளவர்கள் உதவிசெய்ய வேண்டும். இதுவே நாட்டின் அபிவிருத்திக்கு  நல்லது.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரண உதவிகளையும் அவ்வாறே  வழங்க வேண்டும். நாட்டைக் கட்யெழுப்புவதற்கு,  இனங்களுக்கு இடையில்  ஒற்றுமை அவசியம்¸ இதனை உணர்ந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். பாதிப்புக்கு உள்ளான அனைத்துப் பாடசாலைகளும், உடனடியாக புனரமைக்கப்படும். அதற்கான ஆய்வுகளை  பொறியியலாளர்கள்  மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கான சீருடைகள்¸ காலணிகளை வழங்குவதற்கும் தேசிய பாடசாலைகள் மூலம் கல்வி அமைச்சினால் சேகரிக்கப்பட்ட பொருட்களும் பாதிக்கபட்ட மாணவர்களிடம் கையளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன” என்று, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .