Gavitha / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.ஆ.கோகிலவாணி, கவிதா சுப்ரமணியம், வி.நிரோஷினி
தோட்டத் தொழிலாளர்களினால் தொடர்ந்து 10 நாட்களாக முன்னெடுத்துவரும் சம்பளப் போராட்டத்தை அடுத்து, தொழில் மற்றும் தொழிற்சங்க அமைச்சில் நேற்றுக் கூடிய முதலாளிமார் சம்மேளனம், நாட்சம்பளமாக 730 ரூபாயை வழங்க இணங்கியுள்ளது.
எனினும், 3 நாட்களுக்கான சம்பளத்தையே முதலாளிமார் சம்மேளனம் வலியுறுத்தியதால், அதற்கு உடன்படாத தொழிற்சங்கங்கள், 6 நாட்களுக்கான வேலையை வலியுறுத்தின. இதனால், நேற்றைய பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி நிறைவடைந்தது.
இந்நிலையில், மேற்படி பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்த தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆகியோர், தொழிற்சங்கங்களின் கருத்துக்கு உடன்பட்டதுடன், இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்துவிட்டு இன்று செவ்வாய்க்கிழமை (05) முடிவை அறிவிக்குமாறும், இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தையே இறுதிப் பேச்சுவார்த்தை என்றும் கடுந்தொனியில் கூறினர். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டொப்பந்த பேச்சுவார்த்தையின் 10ஆவது பேச்சுவார்த்தை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை, பகல் 12.30 மணியளவில், நாரஹேன்பிட்டியவிலுள்ள தொழில் அமைச்சில் நடைபெற்றது.
அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில், முதலாளிமார் சம்மேளனமும் பிரதான தொழிற்சங்கங்களான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் யூனியன், பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு என்பன பங்குபற்றியிருந்தன.
இப்பேச்சுவார்த்தை தொடர்பில், பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.இராமநாதன் தெரிவித்ததாவது,
“தோட்டத் தொழிலாளர்களுக்கு 730 ரூபாய் சம்பளத்தை வழங்க, முதலாளிமார் சம்மேளனம் ஓரளவு இணங்கி வந்தது. இதன்படி, ஒரு தொழிலாளியின் அடிப்படை நாட் சம்பளம் 500 ரூபாய், மேலதிகமாகப் பறிக்கும் ஒரு கிலோ கொழுந்துக்கு 140 ரூபாய், தேயிலை - இறப்பர் விலைக்கேற்ப வழங்கப்படும் கொடுப்பனவு 30 ரூபாய், வரவுக்கான கொடுப்பனவு (75 சதவீதமாயின்) 60 ரூபாய் உள்ளடங்கலாக 730 ரூபாய் சம்பளத்துக்கு, முதலாளிமார் சம்மேளனம் இணங்கியது. எனினும், மூன்று நாட்களுக்கு மட்டுமே மேற்படி சம்பளத் தொகை வழங்கப்படுமெனவும் ஏனைய நாட்களுக்கு தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தின் நிறைக்கு ஏற்பவே வழங்கப்படுமெனவும் அச்சம்மேளனம் கூறியது.
இதற்கு உடன்படாத தொழிற்சங்கங்கள், 6 நாட்களுக்கான வேலையை வலியுறுத்தின. 3 நாட்களுக்கு வேலை வழங்குப்படுமெனில், அது கூட்டொப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள தொழிலாளர்களின் உரிமையை மீறுவதாக அமையும் எனக் கூறிய தொழிற்சங்கங்கள், இவ்விடயத்தை அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, நவீன் திசாநாயக்க ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டுவந்தன.
இந்நிலையில், தொழிற்சங்கங்களின் கருத்துக்கு உடன்பட்ட அமைச்சர்கள், தொழிலாளர்களுக்கு 6 நாட்கள் வேலை வழங்குமாறு, முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தம் கொடுத்தனர். இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்துவிட்டு, நாளை (இன்று) புதன்கிழமை முடிவை அறிவிக்குமாறும் நாளை (இன்று) முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தையே இறுதிபேச்சுவார்த்தையாக அமைய வேண்டுமென்றும், எச்சரிக்கும் பாணியில் கூறினர். இந்நிலையில் இப்பேச்சுவார்த்தை, புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது” என்றார்.
இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில், நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய
இ.தொ.கா.வின் உபதலைவர் முத்து சிவலிங்கம்,“தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில், முதலாளிமார் சம்மேளனம் சார்பாகவும் அரசாங்கம் சார்பாகவும் முன்வைக்கப்பட்டுள்ள 730 ரூபாய் சம்பள நிர்ணயக் கொடுப்பனவை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
மேலும், இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின்போது, வேலை நாட்கள் மட்டுப்படுத்தப்பட்டதை முறியடிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“தனது 730 ரூபாய் கொடுப்பனவில், ஒரு சதத்தையேனும் அதிகரிப்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்கவில்லை. எது எவ்வாறாயினும், மீண்டும் தொழில் அமைச்சருடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது, இது தொடர்பில் அமைச்சருக்குத் தெளிவுபடுத்துவோம்” என்றும் அவர் கூறினார்.
“கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, தொடர்ந்தும் இழுபறி நிலையை கொண்டிருக்குமாயின், இன்னும் ஒரு வருடத்துக்குள் புதிதாக ஓர் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு, தோட்டக் காணிகளைப் பிரித்துக்கொடுக்க வேண்டும். அதில் வெளியாரின் தலையீடு இருக்கக் கூடாது என்று, தொழில் அமைச்சரிடம் கோரியுள்ளோம். இதுவே, தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் என எண்ணுகின்றோம்” என அவர் மேலும் கூறினார்.
730 ரூபாய் சம்பளம் வழங்கினாலும், தொழிலாளர்களினுடைய ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்று பார்க்கும்போது, அந்தத் தொகை 820 ரூபாயாக அதிகரிக்குமென, முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்று 11ஆவது தடவையாக நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையானது, இறுதியான பேச்சுவார்த்தையாக அமையலாம் என்றும் கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்படலாம் என்றும் தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago