Kogilavani / 2020 நவம்பர் 29 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன
'சம்பள உயர்வு கிடைக்காது, பல்கலைக்கழகம் வராது, எதுவுமே நடக்காது என குறைகளை மட்டுமே கூறிக்கொண்டு அரசியல் நடத்துபவர்களுக்கு மத்தியில், நிச்சயம் நடக்கும் எனக்கூறி அதற்கான தடைகளை உடைத்தெறிந்து வெற்றியை நோக்கிப் பயணிப்பதே எமது உறுதியான கொள்கையாகும்' என்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலை டெரிக்கிளயார் தோட்டப் பாதை, 78 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (29) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், 'மலையகத்திலுள்ள அரசியல்வாதியொருவர் வானொலியொன்றுக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். ஆயிரம் ரூபாய் கிடைக்குமா என கேட்டனர், கிடைக்காது என்றார். பல்கலைக்கழகம் பற்றியும் வினா எழுப்பப்பட்டது. அதற்கும் வராது என பதிலளித்துள்ளார். மலையக மக்களுக்காக பாதீட்டில் நிதி ஒதுக்கீடு இடம்பெறவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
'வராது, கிடைக்காது, முடியாது என குறைகளை மட்டும் கூறிக்கொண்டிருப்பது தலைமைத்துவத்தின் பண்பு கிடையாது. தீர்வுகளை அடைவதற்காக தடையாக உள்ள காரணிகளை உடைத்தெறியவேண்டும். அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என திட்டம் வகுக்குவேண்டும். இதனை எம்மால் நிச்சயம் செய்யமுடியும். அரசியலுக்கு அப்பால் சிறந்த நிர்வாகியாக செயற்படுவதையே நான் விரும்புகின்றேன்' என்றார்.
மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் என்பது, முழு நாட்டுக்குமானது என்றும் அதில் ஒவ்வொரு பிரிவுகளுக்கான ஒதுக்கீடுகள் இருக்காது என்பதை புரிந்துகொள்ள வேண்டும என்றும் தெரிவித்த அவர், பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தான் பதவிக்கு வந்த குறுகிய காலத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் வீட்டுத் திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றார்.
அதற்கு முன்னர் அரைகுறையாக உள்ள வீடுகளை முழுமைப்படுத்தி பயனாளிகளிடம் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போதையச் சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் போதாது என்றுத் தெரிவித்ததுடன் இந்த . இந்த முறைமை மாற்றப்படவேண்டும் என்றும் பேச்சுவார்த்தைகளின் போது இதனை வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
'சீனா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் ஆரம்பத்தில் வெள்ளையர்களே தேயிலைத் தோட்டங்களை நிர்வகித்தனர். தற்போது நிலைமைமாறியுள்ளது. மக்களிடம் அவை ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே, எமது மக்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். அதற்காகவே நாம் முயற்சிக்கின்றோம். எனவே, தொழிற்சங்க ரீதியிலாவது ஒன்றுபடவேண்டும்' என்றார்.


22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026