2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

தனிவீட்டுத் திட்டத்தினால் இணைப்புக்குழு கூட்டத்தில் சலசலப்பு

Kogilavani   / 2017 மார்ச் 28 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

பெருந்தோட்டங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தனிவீட்டுத் திட்டம் தொடர்பில், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களான இலங்கைத்  தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியவை, எதிர்மாறான கருத்துகளை  தெரிவித்துக்கொண்டதால், இணைப்புக் குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டம், இணைத்தலைவர்களான அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், கே.கே.பியதாச ஆகியோர் தலைமையில்  நுவரெலியா மாவட்ட செயலகத்தில், நேற்று (27) நடைபெற்றது.  

இதன்போது, பெருந்தோட்டங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தனிவீட்டுத் திட்டம் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

“தற்போது பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தனி வீட்டுத் திட்டமானது, தொழிற்சங்க ரீதியாகவே முன்னெடுக்கப்படுகின்றன. இந்த வீடமைப்புத் திட்டமானது, உரியவர்களை சென்றடைவதில்லை” என்று, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.  

“குறிப்பாக இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு வருகின்ற வீடுகளும் கட்சி ரீதியாகவும் தொழிற்சங்க ரீதியாகவுமே வழக்கப்பட்டு வருகின்றன. எனவே, உடனடியாக குழுவொன்றை அமைத்து, இவ்விடயங்களை ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.  

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் ஆகியோர்,  
“வீடமைப்புத் திட்டமானது, எந்தவிதமான கட்சி, தொழிற்சங்க பேதம் இன்றியே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் அமைச்சர்களாக இருந்தவர்கள், இந்த மக்களக்காக எதனையும் செய்யவில்லை. ஆனால், தற்போது அமைச்சர் திகாம்பரம் அனைவருக்கும் பொதுவாக, கட்சி, தொழிற்சங்க பேதங்களை மறந்து இந்தத் திட்டத்தை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார்.  

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சிலரே, இந்தத் திட்டத்தை குழப்புவதற்கு வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். எனவே, பொய்யான வதந்திகளைப் பரப்பி, மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை குழப்ப வேண்டாம். எமது மக்கள் கடந்த 200 வருடங்களாகப் பட்ட துன்பங்களுக்கு, தற்போதே விடுதலை கிடைத்து வருகின்றது. அதனை குழப்ப வேண்டாம்.  

குறிப்பாக இந்திய அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டமானது, மிகவும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்களின் துயரங்களை விளங்காதவர்கள் நாங்கள் இல்லை. எனவே, இந்தத் திட்டம் மட்டுமல்ல எந்தத் திட்டமாக இருந்தாலும் அது பொதுவாக எல்லோரையும் சென்றடையும் வகையிலேயே, நாம் செயற்படுத்தி வருகின்றோம்.  

அதில் எந்தவிதமான கட்சி, தொழிற்சங்க பேதங்களும் இல்லை என்பதை எம்மால் நிருபித்துக் காட்ட முடியும்” என தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X