2025 ஜூலை 23, புதன்கிழமை

‘தமிழ் மொழித்தின போட்டிகளில் மலையகம்சார் போட்டியாளர்கள் புறக்கணிப்பு’

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா                         

 

“அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டிகளில் பங்குபற்றுபவர்களில் பதுளை மற்றும் மலையகம் சார் போட்டியாளர்கள் புறக்கணிக்கப்படுவதுடன், பிரபல்யமிக்க அதிபர், ஆசிரியர்கள் ஆகியோரது பிள்ளைகள் உள்ளிட்டு அவர்களுக்கு தேவையானோர் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.

இப்பாகுபாடு மற்றும் பாரபட்சங்கள் நீக்கப்படவேண்டும்” என்று, பதுளையில் இருந்து போட்டிகளில் கலந்துகொண்டோரில் பலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டி மத்தியஸ்தர் குழுவிலும் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களைச் சார்ந்தவர் இல்லாமை பெரும் குறைப்பாடாகும். இப்போட்டியாளர்கள் ஒன்பது மாகாணங்களைச் சார்ந்தவர்களாக இருந்தபோதிலும், முக்கிய பிரதேசங்களைச் சார்ந்த மூன்று பேர் மட்டுமே, மத்தியஸ்தர்களாக கடமையாற்றும் நிலை உருவாகியுள்ளது.

“இத்தகைய நிலையினாலேயே, ஊவா மாகாணத்தில் இருந்து போட்டியில் கலந்துகொள்பவர்கள், திறமைசாலிகளாக இருந்தபோதிலும், அவர்கள் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை.

“ இப்போட்டிகள் மூலம் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு, பல்கலைகழக அனுமதியின் போது வாய்ப்புகள் கிடைக்கின்றன.

“இருப்பினும், ஒரு சில பாடசாலைகளே இதற்கு முக்கியதுவம் வழங்குகின்றன. சில பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பதை காணக்கூடியதாக இருகின்றது. இதற்கு அதிபர்கள், பெற்றோர்கள், தேசியமட்ட போட்டிகளில் வெற்றிகள் கிடைப்பதில்லை எனத் தெரிவித்து காரணம் காட்டுகின்றனர்.

“தேசிய மட்டப் போட்டிகள் தொடர்ச்சியாக கொழும்பை மையமாக கொண்டே நடாத்தப்படுகின்றன. அதிலும் ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணத்தை சேர்ந்தவர் மிகவும் சிரமப்படுகின்றனர். தங்குமிட வசதி, அடிப்படை வசதிகள் இல்லாத பாடசாலைகளே போட்டிகள் நடாத்த தெரிவு செய்யப்படுகின்றன. வருடத்தில் ஒருமுறை நடாத்தும் இந்த போட்டிகள் ஒழுங்காக திட்டமிடப்படாமல்  இருக்கிறது.

அதே போன்று முடிவுகளை பொறுத்தவரையில் வடக்கு, கிழக்கு, மேல் ஆகிய மாகாணங்களுக்கே பெரும்பான்மையாக செல்கின்றது. இது சந்தேகத்தை உருவாக்குகின்றது. அத்தோடு போட்டிக்கு மத்தியஸ்தம் வகிப்பவர்கள் போட்டிகளை ஒழுங்கு செய்யபவர்கள் அனைவரும் இம்மாகாணத்தை பிரதிநிதிதுவப்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர்.

இந்நிலையை எதிர்த்துக் கேட்பதற்காக மலையக பாடசாலை மாணவர்களுக்காக குரல் கொடுக்க மாகாணத்தில் இருந்து பொருத்தமானவர்கள் இல்லாது இருப்பது கவலையளிக்கின்றது” எனத் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .