2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தம்பியை வெட்டிய அண்ணாவுக்கு விளக்கமறியல்

Editorial   / 2025 மே 22 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில், தம்பியை அரிவாளால் கொடூரமாகப் பலமுறை வெட்டி காயப்படுத்திய அவரது அண்ணாவை,  ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பதுளை நீதவான் நுஜித் டி சில்வா, புதன்கிழமை (21) உத்தரவிட்டார்.

இந்த மோதலில் காயமடைந்த இரண்டு சகோதரர்களையும், பதுளை வைத்தியசாலையில் பதுளை பொலிஸார் அனுமதித்தனர்.

பதுளை நீதவான், வைத்தியசாலைக்குச் சென்று சந்தேக நபரைப் பரிசோதித்த பின்னர், விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அதுவரை பொலிஸ் பாதுகாப்பில் இருந்த சந்தேக நபர், பின்னர் பதுளை சிறைச்சாலை அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டார்.

முந்திய செய்தி…

பதுளை நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில், செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் 3.30 மணியளவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மூத்த சகோதரர், தம்பியை அரிவாளால் கொடூரமாகப் பலமுறை வெட்டி காயப்படுத்தினார்.

பதுளை, அமுனுவெல்பிட்டியவில் வசிக்கும் 51 வயதான வேலு காந்தி (தம்பி), 52 வயதான வேலு உதயகுமார (அண்ணா) இருவரும் அருகருகே இரண்டு வீடுகளில் வசித்து வருவதாகவும், இருவரும் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு பெரிய கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ​​மூத்த சகோதரர் தனது தம்பியை கொடூரமாக  மீண்டும் மீண்டும் ஒரு கத்தியால் தாக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது,  பதுளை பிரதான பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் உடனடியாக சம்பவ இடத்திற்குப் பாய்ந்து சென்று, சந்தேக நபரை (அண்ணனுடன்) மடக்கி பிடித்து அவரை அடக்கி, கத்தியை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர்.

சம்பவ இடத்தில் இருந்த இரண்டு இளைஞர்களும் பொலிஸாருக்கு உதவினர். அருகிலிருந்த சிலர் சந்தேக நபரைத் தாக்க முயன்ற போதிலும், இந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் யாருக்கும் அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காயமடைந்த நபர் பலரின் உதவியுடன் முச்சக்கர வண்டியில் பதுளை போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்,  தனது தம்பி கத்தியால் இரண்டு முறை தன்னை குத்தியபோது, ​​அதை பறித்து தனது தம்பியை தாக்கியதாக தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது தம்பி மீதான தாக்குதலின் போது, சந்தேக நபருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் ஒரே வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சந்தேக நபரின் மூத்த சகோதரர் பொலிஸ் காவலில் இருப்பதால், அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களுக்கு இடையில் அடிக்கடி கருத்து முரண்பாடு ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தம்பி, அண்ணவை இன்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் கத்தியால் நெஞ்சில் குத்தியதில், அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, ஆறு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது, 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X