2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

தலவாக்கலை பாடசாலையில் பதற்றம்

Gavitha   / 2020 நவம்பர் 24 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், துவாரக்ஷன்

தலவாக்கலை பகுதியில், சுயதனிமைப்படுத்தலில் இருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பாடசாலைக்கு வந்துள்ளனர் என்ற தகவல் வெளியானதை அடுத்து, தலவாக்கலையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் இன்று (24) பதற்றமான நிலை ஏற்பட்டது.

பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை, கொரோனா வைரஸ் அச்சத்தால், அவர்களின் பெற்றோர் இடைநடுவில் வீடுகளுக்கு அழைத்துச்சென்றமையால் இந்த பதற்றமான நிலை ஏற்பட்டது.

சுயதனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைக்கு வந்துள்ளனர் என்ற தகவல் கிடைத்ததை அடுத்தே, பெற்றோர் இவ்வாறு செயற்பட்டுள்ளனர்.

நேற்று (23) ஆரம்பமான கல்வி நடவடிக்கைகள், இன்று (24) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது.

இந்நிலையில், கொழும்பில் இருந்து பெருந்தோட்டப்பகுதிகளுக்கு வருபவர்கள், சுகாதார அதிகாரிகளால் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான குடும்பங்களைச் சேர்ந்த 5 மாணவர்கள், இன்று (24) பாடசாலைக்கு வந்துள்ளனர். எனினும், பாடசாலை நிர்வாகத்தினரால், குறித்த ஐந்து மாணவர்களும் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களின் மாணவர்கள் பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்ற தவறான செய்தி அறிந்த பெற்றோர், பாடசாலைக்கு விரைந்து தங்களது பிள்ளைகளை அனுப்புமாறு, அதிபர், ஆசிரியர்களிடம் கோரியுள்ளனர். இந்நிலையிலேயே, மாணவர்களை, அங்கு வந்த பெற்றோருடன் அதிபர் அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அதிபர், " இது தொடர்பில் நான் நுவரெலியா கல்வி வலய பணிப்பாளருடன் கலந்துரையாடினேன். அவரின் ஆலோசனையின் பிரகாரம், மாணவர்களை அழைத்துச்செல்ல வந்த பெற்றொர்களிடம் கடிதம் வாங்கிக்கொண்டு மாணவர்களை அனுப்பி வைத்தேன்” என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X