2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘தாத்தாவின் பெயரில் கொள்ளையடித்தோரை விசாரணைப்பிரிவுக்கு அனுப்புவேன்’

Editorial   / 2017 ஒக்டோபர் 30 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

“தாத்தாவின் பெயரை வைத்து, 1,325 மில்லியன் ரூபாயைக் கொள்ளையடித்தவர்களை, நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு விரைவில் அனுப்புவேன்” என்று, மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் சூளுரைத்துள்ளார்.   

பெருந்தோட்டப் பகுதிகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தனி வீடுகளுக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

ஹட்டன், டன்பார் விளையாட்டு மைதானத்தில் “எங்கள் நிலத்தில் - எங்கள் வீடு” எனும் தொனிப்பொருளில்,  2,864 பயனாளிகளுக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சால் நிர்மாணிக்கப்பட்ட தனி வீட்டுத்திட்டத்தின் மூன்றாம் கட்ட காணி உறுதி வழங்கும் இந்நிகழ்வில், அமைச்சர் தொடர்ந்து

உரையாற்றுகையில்,   “தேர்தல் காலங்களில் நான், உங்களிடம் உறுதியளித்ததுபோல தனி வீட்டுத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றேன். அதேபோல, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வாக்குறுதியளித்தமை போல 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு அனுமதியும் வழங்கியுள்ளார். அதற்கு நான் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் தற்போது கட்டம் கட்டமாக, வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” என்றார்.  

அத்துடன், “எந்த வேலைத்திட்டத்தை நான் செய்தாலும், அந்த வேலைத்திட்டத்தை நாங்களே முன்வத்தோம் என சிலர் உரிமை கொண்டாடுகின்றனர். காணி, தனிவீடு மற்றும் உறுதிப்பத்திரம், பிரதேச சபைகளை அதிகரித்தல் என எல்லாவற்றுக்கும் சிலர் உரிமை கோருகின்றனர். மலையகத்துக்குச் சிறப்பாகச் சேவையாற்றி அமரத்துவம் அடைந்த அந்த சிறந்த மனிதரை, நான் எப்போதும் குறை கூறியதில்லை.

“ஆனால், அப்படியான ஓர் உறவு எனக்குத் தாத்தாவாகக் கிடைத்திருந்தால், மலையகத்தையும் அந்தத் தொழிற்சங்கத்தையும் எங்கோ உயர்த்தியிருப்பேன். தாத்தாவின் பெயரை வைத்து சிலர், ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவை தொடர்பிலான தகவல்களைத் திரட்டியுள்ளேன்.

 “இந்தியப் பெண்ணொருவருக்கு, நிறுவனமொன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக, 130 மில்லியன் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இன்று எனக்கெதிராக, போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறான மோசடிக்காரர்களை, எப்.ஐ.சி.டிக்கு விரைவில் விசாரணைக்கு அனுப்பிவைப்பேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

மேலும், “நான், அபிவிருத்தியை மட்டுமல்ல உரிமைத் திட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றேன். மீண்டும் அடிமையாக, மாடி வீட்டுத்திட்டம் வேண்டுமா, தனி வீட்டுத்திட்டம் வேண்டுமா என நீங்கள் தீர்மானியுங்கள். எமது முற்போக்குக் கூட்டணியை யாரும் உடைக்க முடியாது. அமைச்சர்களான இராதா மற்றும் மனோ கணேசன் ஆகியோரின் ஒற்றுமையுடன், எமது பயணம் தொடரும்” என்றும் அவர் தெரிவித்தார்   

இராதாகிருஷ்ணன்  

இந்த வைபவத்தில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் உரையாற்றுகையில்,   
“ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலே, மலையக மக்கள் பல்வேறு உரிமைகளைப் பெற்றுவந்துள்ளனர். கடந்த தேர்தலின் போது, தலவாக்கலையில் இடம்பெற்ற கூட்டத்தில், கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டித்தருகின்றேன். ஆனால், 50 ஆயிரம் மதுப்போத்தல்களைத் தரமாட்டேன் என்றார். அந்த வாக்குறுதி இன்று நனவாகியுள்ளது.  

“நுவரெலியா மாவட்ட மக்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணியை நம்பி வாக்களித்து, நல்லாட்சியில் முக்கிய பங்கு வகித்தமைக்கான பலனை, இன்று அனுபவிக்கின்றனர். கடந்த காலம் தொட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலே மலையகத்துக்கு உரிமைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அந்த வகையில், இந்து கலாசார அமைச்சும், ஐக்கிய தேசியக் கட்சியால் உருவாக்கப்பட்டது” என்றும் நினைவு கூர்ந்தார்.  

“ஆட்சி மாற்றத்தால், அவ்வமைச்சு திணைக்களமாக மாற்றப்பட்டது. பின்னர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்ததன் பின்னர், மீண்டும் அவ்வமைச்சு எமக்குக் கிடைத்தது. இவ்வாறு ஒரு சமூகத்தின் தேவையை அறிந்து, சேவை செய்வது, ஐக்கிய தேசியக் கட்சியேயாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.   

“லயன் வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் திகாம்பரத்தின் பணி, சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. அதேபோல, கல்வித் துறையிலும் பாரிய வளர்ச்சியடையத் தேவையான நடவடிக்கைகளை, இந்த அரசாங்கத்தின் ஊடாக, முன்னெடுக்கமுடிகின்றது. கடந்த இரண்டு வருடங்களில் 29 மில்லியன் ரூபாயை வழங்கியதுடன், வருகின்ற ஆண்டில் 450 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

“மலையக சமூகம் தலை நிமிர வேண்டுமாயின் அந்தச் சமூகம் கல்விகற்ற சமூகமாக மாற வேண்டும். ஆகவேதான், 25 பாடசாலைகளைத் தரமுயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம். அதனூடாக, கணித, விஞ்ஞானப் பாடங்களில் கல்வி வளர்ச்சியை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.  

“அத்தோடு, சுகாதாரத்தை மேம்படுத்த, சுகாதார அமைச்சின் ஊடாக, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு 150 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளதுடன், டிக்கோயா மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களையும் தாதியர்களையும் அதிகளவில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.  

“இதேவேளை, தமிழ் முற்போக்குக் கூட்டணி ஊடாக, எமது பயணம் தொடரும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .