2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

‘தாய்ப்பால் ஊட்டும் நேரத்தைக் கூட்டவும்’

Kogilavani   / 2018 ஜூன் 08 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்   

பெருந்தோட்டப் பகுதிகளில், கைக்குழந்தைகளையுடைய பெண் தொழிலாளர்களுக்கு, தாய்ப்பால் ஊட்டுவதற்கான நேரத்தை ஒரு மணித்தியாலமாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், பிரசவக் காலத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் 84 நாள்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென்றும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.   

மகப்பேற்று சட்டத்தினதும் கடை, அலுவலக ஊழியரினதும் சட்டங்களின் திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,  

நாட்டில் ஏனைய தொழிற்றுறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு, தாங்கள் பெறும் மூன்றாவது குழந்தைக்கும் 84 நாள்கள் பிரசவ விடுமுறை வழங்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், ஆனால், பெருந்தோட்டப் பெண் தொழிலாளர்களுக்கு, இந்த உரிமை மறுக்கப்பட்டு வருவதாகவும் சாடினார்.  

அந்த நிலைமையை மாற்றி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் அனைத்துப் பிரசவங்களின்போதும் 84 நாள் விடுமுறை வழங்கப்படுவதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளமையை வரவேற்பதாக பாராட்டிய அவர், அதேநேரம் பெருந்தோட்ட பெண்களுக்கு, தாய்ப்பால் ஊட்டுவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். பெருந்தோட்டங்களிலுள்ள பிள்ளை பராமரிப்பு நிலையங்களில், தாய்ப்பால் ஊட்டுவதற்கு 30 நிமிடங்களே வழங்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், எனவே, பெண் தொழிலாளர்களின் வேலைத்தளத்துக்கும் பிள்ளைப்பராமரிப்பு நிலையத்துக்கும் இடையிலான தூர இடைவெளியைக்கருத்திற் கொண்டு, இந்நேர அளவை, ஒரு மணித்தியாலமாக அதிகரிப்பதற்குச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.   

“இரண்டாவது சட்டத்திருத்தமாக முன்வைக்கப்பட்டிருப்பது கடை அலுவலக ஊழியர் சட்டத்திருத்தமாகும். இந்தச் சட்டத்தின் கீழ் அலுவலக நேரத்தில் தாய்ப்பால் ஊட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கவில்லை. தற்போது கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் ஊடாக, இந்தக் குறை நிவர்த்திக்கப்படுகின்றது. மேற்படி இரண்டு திருத்தங்களைக் கொண்டு வந்தமைக்காக தொழில் அமைச்சுக்கும் அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகள் சட்டவரைஞர் திணைக்கள அதிகாரிகள் நன்றிக்குரியவர்கள்” என அவர் மேலும் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X