2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தூய குடிநீரினை பெற்றுக்கொடுப்பதற்காகவே ‘சூழல் புனிதமானது’ நிகழ்ச்சித் திட்டம்

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், புஷ்பராஜ் குழந்தைவேல், மு.இராமச்சந்திரன்

சிவனொளிபாத அடிவாரத்திலிருந்து ஊற்றெடுத்து ஓடும் தூய குடிநீர், எவ்வித மாசுமின்றி, அழுக்குகள் கலக்காது, தூயநீராக நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காகவே ‘சூழல் புனிதமானது’என்ற நிகழ்ச்சித்திட்டம் ஐந்தாவது வருடமாக, நல்லதண்ணி பிரதேசத்தை, அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது என, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, தெரிவித்தார்.

சர்வதேச புவி தினத்தை முன்னிட்டு, ஒழுங்கு செய்யப்பட்டிருந்த, சிவனொளி பாதமலையினை சுத்தப்படுத்தி, அதன் கழிவுகளை உத்தியோகபூர்வமாக, மஸ்கெலியா பிரதேசசபையிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, நேற்று (23), முதலமைச்சர் தலைமையில் நல்லதண்ணி நகரில் நடைபெற்றது.

மேற்படி நிக​ழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். முதலமைச்சர், தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘சூழல் புனிதமானது’ நிகழ்ச்சித் திட்டத்தின் ​பிரதான நோக்கம், இந்தப் புனித பூமியில் ஊற்றெடுக்கும், நீரூற்றுக்களையும் வன விலங்குகளையும், இயற்கை சூழலையும் பாதுகாத்து, அதனை எதிர்கால சந்ததியினருக்கு பெற்றுக்கொடுத்தலேயாகும். இந்த புனித பூமி பிரதேசத்தில், கழிவுகளை அகற்றுவதனால், இந்த பிரதேசம் பல்வேறு சூழல் சீர் கேடுகளுக்கு ஆளாகி வருகின்றது. இதனால் இயற்கை அழகு பாதிக்கப்படுவதுடன், பெருமதிமிக்க உயிரினங்கள் மற்றும் செடி கொடிகளும் அழிந்து போகின்றன.

“நாம் சிவனொளி பாதமலையினை தரிசிக்க, வீட்டிலிருந்து புறப்படும் போது, மிகவும் புனிதமாகவும் தூய்மையாகவுமே புறப்பட்டு வருகின்றோம். ஆனால் நாம் இங்கு வந்து, நாம் கொண்டு வந்த கழிவுகளை, சுற்றுபுறச் சூழலில் தூக்கி எறிவதனால், பலவிதமான பாவங்களுக்கு ஆளாகி விடுகின்றோம்” என்று கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“பல வருட காலமாகவே, ​இங்குள்ள பிரதேச மக்களும், மஸ்கெலியா பிரதேச சபை, அம்பகமுவ பிரதேச சபை போன்றவற்றைச் சேர்ந்தவர்களும், இந்த கழிவுகளை, பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அகற்றி வருகிறார்கள். அதற்கு அவர்கள் என்ன பாவம் செய்தார்கள். பல வருடகாலமாக, இந்த சூழலில் போடப்பட்ட குப்பை கூலங்களை, பல்கலைகழக மாணவர்கள் உட்பட, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் கழிவுகளை அகற்றுவதற்கு, வருடா வருடம் எமக்கு உதவி வருகின்றன.

எனினும், இது தொடர்ந்தும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால், இங்கு வரும் பொது மக்கள் இதனை உணர்ந்து செயற்படவேண்டும். எமக்கு இருக்கும் அழகிய, மிகவும் பெருமதிமிக்க சொத்தான சிவனொளி பாதமலையினை பாதுகாத்து வரும் சந்ததியினருக்கு, பெற்றுக்கொடுப்பது எமது அனைவரினதும் கடமையாகும். எனவே அதனை உணர்ந்து சிவனொளிபாத மலையினை தரிசிக்க வருபவர்கள், தாங்கள் கொண்டு வரும் கழிவுகளை இங்கு இடாது, அதனை மீண்டும் தங்களது வீடுகளுக்கே கொண்டு செல்லுமாறு, மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு மஸ்கெலியா பிரதேசசபையின் தவிசாளர் ஜி.செண்பகவள்ளி, ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், மஸ்கெலியா பிரதேசசபையின் உபதலைவருமான பெரியசாமி பிரதீபன், ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன், ஹட்டன் கோட்ட பொலிஸ் அத்தியட்சகர் அம்பேபிட்டிய உட்பட பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீர்ர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, கடந்த டிசம்பர் முதல், ஏப்ரல் வரை மட்டும், சிவனொளிபாதமலை பிரதேச புனித பூமியிலிருந்து, சுமார் ஐந்து இலட்சத்துக்கும் மேலான, பிளாஸ்டிக் போத்தல்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X