2026 மே 02, சனிக்கிழமை

தோட்டத் தலைவர்களால் இ.தொ.காவுக்கு அபகீர்த்தி

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தோட்டத் தலைவர்களால், இ.தொ.காவின் பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில், இ.தொ.காவின் வாக்கு வங்கிச் சரிவுக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம் என்றும் பெருந்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தால் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணங்கள், சலுகைகள் அனைத்தும் இ.தொ.காவின் தோட்டத் தலைவர்களின் குடும்ப உறவுகளுக்கும் தோட்டத் தலைவர்களின் நலன் விரும்பிகளுக்கும் மட்டுமே பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் தோட்டத்தில் எவ்வித வருமானமுமின்றி வாழும் குடும்பங்களுக்கு, எவ்வித நிவாரணங்களும் சலுகைகளும் கிடைக்கப்பெறுவதில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கத்தால், நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் சமுர்த்தி நிவாரணத்தை வழங்கியுள்ள போதிலும், பெருந்தோட்டப் பகுதிகளில் சமுர்த்தி நிவாரணம், உரியவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஓரளவு வசதி படைத்தவர்களின் குடும்பங்களுக்கே, சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதாகவும் எவ்விதத் தொழிலுமின்றி ஊரடங்குச்சட்டத்தால் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு, இதுவரை எவ்விதக் கொடுப்பனவும் வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இது தொடர்பில், கிராம சேவர்களிடம் வினவினால், தோட்டத் தலைவர்களால் வழங்கப்பட்ட பெயர் பட்டியலுக்கு அமைவாகவே, சமுர்த்தி கொடுப்பனவு, வயோதிபர்களுக்கான கொடுப்பனவு போன்றவை வழங்கப்படுவதாக, பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக வேல்ட்விஷன் போன்ற நிறுவனங்களால் வழங்கப்படும் நிவாரணப் பொதிகளும், இ.தொ.காவின் தோட்டத் தலைவர்களின் குடும்பம், குடும்ப உறுப்பினர்கள், நலன்விரும்பிகளுக்கே பகிர்ந்தளிக்கப்படுவதாக,  தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தலவாக்கலை, லிந்துலை பகுதிகளில், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்வதாக, பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தோட்டத் தலைவர்கள், தங்களது குடும்ப உறுப்பினர்களது பெயரையும் நலன் விரும்பிகளின் பெயரையும் குறித்த பட்டியலில் உள்ளடக்குவதன் காரணமாகவே, தாம் எவ்விதக் கொடுப்பனவையும் பெற்றுக்கொள்ள முடியாது துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஒரே குடும்பத்தில் உள்ள பலருக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

தோட்டத் தலைவர்களில் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக, பெருந்தோட்ட மக்கள் இ.தொ.காவின் மீது அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .