Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
நுவரெலியா மாவட்டத்தில், பிரதேச செயலகங்களை அதிகரிப்பதே, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அடுத்த இலக்கு என்று, விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்காக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு - 187 மில்லியன் ரூபாயே கிடைத்துள்ளதாகவும் ஆனால் ஏனைய மாவட்டங்களில், பிரதேச செயலகங்கள் அதிகமென்பதால், அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், நுவரெலியா மாவட்டத்தில் காணப்படவேண்டிய பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே, கூட்டணியின் அடுத்த முயற்சி என்றும் தெரிவித்தார்.
மலையக அபிவிருத்தி அதிகார சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்று (07) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், அமைச்சர் திகாம்பரத்துக்கு புகழாரம் சூட்டியதுடன், தங்கக்கட்டியாக இருந்த அமைச்சர் பழனி திகாம்பரத்தை, தமிழ் முற்போக்குக் கூட்டணியானது, தங்க மாலையாக மாற்றியுள்ளதென்றும் தெரிவித்தார்.
“தங்கக்கட்டியைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு செல்லமுடியாது என்பதால், பல பொருட்களைச் சேர்த்து தங்க மாலையாக மாற்றி, கழுத்தில் அணியலாம். அதேபோன்று, தங்கக்கட்டியாக இருந்தவரை, பல பொருட்களைச் சேர்த்து, 24 கரட் தங்கமாக மாற்றியுள்ளோம். அவர் தங்கமாக இருந்தார். எனினும், நாம் கூட்டணி சேர்ந்ததாலேயே, அவர் தங்க மாலையாக மாறினார்” என்றும் தெரிவித்தார்.
ஓர் அமைச்சர் என்றவகையில், அமைச்சரவைக்கு வரையறுக்கப்பட்ட சில விடயங்களை மட்டுமே செய்ய முடியுமென்றும் ஆனால், மலையக அதிவிருத்தி அதிகார சபையினூடாக, அமைச்சரின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இச்சபையின் மூலம், பெருந்தோட்டப் பிரதேசங்களை அபிவிருத்திச் செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளதென்றும் அந்த வாய்ப்பை, நாம் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், அவர் தெரிவித்தார்.
மூன்று கட்சிகள் இணைந்து, தமிழ் முற்போக்குக் கூட்டணியாக ஒன்றிணைந்ததால், பல வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன என்று நினைவூட்டிய அமைச்சர், அவற்றில், பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டமையும் குறிப்பிட்டுக் கூறவேண்டிய விடயமாகுமென்றார்.
பிரதேச சபைகள், பிரதேச செயலகங்களுக்கு ஊடாகவே, “கம்பெரலிய”, “கிராம சக்தி” போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால், நுவரெலியா மாவட்டத்துக்கு, குறைந்தது 10 பிரதேச செயலகங்களாவது தேவைப்படுகின்றன என்று, அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
47 minute ago
4 hours ago