2025 ஜூலை 02, புதன்கிழமை

’பதுளையிலும் பிரதேச சபைகள் அதிகரிக்கப்படும்’

Kogilavani   / 2017 நவம்பர் 13 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

“நுவரெலியா மாவட்டத்துக்குரிய பிரதேச சபைகளை அதிகரித்ததைப் போன்றே, பதுளை மாவட்டத்திலும் தமிழர்களால் முன்னெடுக்கக்கூடிய பிரதேச சபைகளின் எண்ணிக்கையை நான்கால் அதிகரிப்பதே, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அடுத்த இலக்காகும்” என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சால், 20 மில்லியன் ரூபாய் செலவில், பதுளை வேவஸ்ச தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 18 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

“தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாரிய முயற்சியால், நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இதன்படி, பதுளை மாவட்டத்தில், தமிழர்கள் எங்கெங்கு கூடுதலாக வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் பிரதேச சபைகளை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கான, பூரண ஆலோசனைகளை, தமிழ் முற்போக்குக் கூட்டணி வழங்கியுள்ளது.

“அதன்படி மடூல்சீமை - ரோபேரி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி ஒரு பிரதேச சபையும் அம்பிட்டிகந்தடி - பூனாகலை - கொஸ்லந்தை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி ஒரு பிரதேச சபையும், உடுவரை - தெமோதரை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி ஒரு பிரதேச சபையும், சர்வட்டி - தொட்டுலாகலை - தம்பேத்தன்ன ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி ஒரு பிரதேச சபையுமாக நான்கு புதிய பிரதேச சபைகளை உருவாக்குவதே, எமது அடுத்த இலக்கு.

“இந்தப் பிரதேச சபைகளின் அதிகரிப்பைத் தொடர்ந்து, புதிய நான்கு பிரதேச செயலகங்கள் ஏற்படுத்தப்படுவதுடன், கிராமசேவை உத்தியோகத்தகர்களும் அதிகரிக்கப்படுவர். இதற்கான முன்மொழிவுகளை, தமிழ் முற்போக்குக் கூட்டணி, அரசுக்கு கொடுக்க ஆரம்பித்துள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .