2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பத்தனை சந்தியில் மக்கள் போராட்டம்

R.Maheshwary   / 2022 ஜூலை 19 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

பத்தனை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள கடைத் தொகுதியை சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்குமாறு தெரிவித்து, நேற்று (18) அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கொட்டகலை - தலவாக்கலை வீதியில் பத்தனை சந்தியில் அமைந்துள்ள கடைத்தொகுதி யாரால் அமைக்கப்பட்டது என்பது உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் குறித்த கடைத்தொகுதி சமூர்த்தி பயனாளிகளுக்கென்று 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதொன்று என்ற கோரிக்கையை முன் வைத்து எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் சமூர்த்தி பயனாளிகளும் அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி மக்களும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கொட்டகலை பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் சுப்ரமணியம் ராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்ட மக்கள், எமது பிரதேசத்தில் எமக்கே தெரியாமல் யாரோ ஒரு கடைத்தொகுதியை அமைத்துள்ளனர். இது தொடர்பாக சில ஊடகங்களில் முழு விபரங்களுடன் கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது.

அதற்குப்பிறகே இது மக்கள் பயன்பாட்டுக்கு ஆரம்பிக்கப்பட்டதென்ற விபரம் தெரியவந்துள்ளது. எனவே தனிநபர்களால் இவ்விடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளது. இதை மக்களுக்கே வழங்க வேண்டும் எனக் கோருகிறோம். எம்மால் சமூர்த்தி சேவைகளைப் பெற தலவாக்கலை வரை பயணிக்க முடியாது என்று கூறினர்.

இவ் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ராஜா கூறுகையில்,

இந்த கட்டிடம் அமைந்ததன் பின்னணியில் பல ஊழல்கள் அரங்கேறியுள்ளன. இது குறித்து நான் கடந்த இரண்டு வருடங்களாக கேள்வி எழுப்பியும் கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் சரியான பதில்களை எனக்கு வழங்கவில்லை. தமக்கும் இந்த கட்டிடத்துக்கும் சம்பந்தமில்லை என்கிறார். அருகிலுள்ள ஆலய நிர்வாக சபையினால் இது 2008ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது என்கிறார். இந்த ஆலயத்துக்கு அப்படி ஒரு நிர்வாக சபையே கிடையாது. ஏனென்றால் நான் இந்த பகுதியை சேர்ந்த உறுப்பினர். 2008ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதிக்கு எவ்வாறு 2022ஆம் ஆண்டு கட்டிடம் கட்ட முடியும்? தனது நிர்வாக எல்லைக்குள் இருக்கும் பகுதியில் ஒரு கட்டிடம் எழுவதை எவ்வாறு பிரதேச சபை நிர்வாகம் பார்த்துக்கொண்டிருந்தது? இதன் பின்னணி சூழ்ச்சி வெளிக்கொணர வேண்டும். இது மக்களுக்கு சேர வேண்டியது. சரியான பதில்கள் எமக்குக் கிடைக்காவிடின் எமது போராட்டம் தொடரும் என்றார்.

பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாத்தின் விளக்கம்

கொட்டகலை பிரதேச சபை 2018ஆம் ஆண்டு தான் ஆரம்பிக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு நுவரெலியா பிரதேச சபையினால் குறித்த ஆலய நிர்வாகத்துக்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்நேரம் நிதி இல்லாத காரணத்தினால் இப்போது கட்டப்பட்டிருக்கலாம். நாம் இந்த கட்டடத்துக்கு எவருக்கும் அனுமதி வழங்கவில்லை. எம்மிடம் எவரும் அனுமதி பெறவும் இல்லை. இது குறித்து வாய் மூலமும் எழுத்து மூலமும் கேள்வி எழுப்பிய அனைவருக்கும் பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் நுவரெலியா பிரதேச சபையால் வழங்கப்பட்ட அனுமதியின் படி கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. நாம் இது குறித்து ஆலய நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளோம். அவர்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்த திட்டத்தை புதுப்பிக்கும் படி கோரியுள்ளோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .