2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

‘பிணையில் விடுதலை செய்யப்பட்டமைக்கு தொழிலாளர்களின் ஒற்றுமையே காரணம்’

Gavitha   / 2021 மார்ச் 11 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஷ்

 

மஸ்கெலியா, சாமிமலை – ஓல்டன் தோட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள், நேற்று (10) பிணையில் விடுதலை செய்யப்பட்டமைக்கு, தொழிலாளர்களின் ஒற்றுமையே காரணம் என, தொழிலாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நேரு கருணாகரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக, ஹட்டன் நீதிமன்ற வளாகத்தில் வைத்து, கருத்துத் தெரிவிக்கும் போதே,  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தொழிலாளர்கள் தரப்பில் வாதத்தைத் தொடங்கிய தான், ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள், நாளாந்தச் சம்பளமாக 1,000 ரூபாயை வலியுறுத்தி வீதிக்கு இறங்கிப் போராடியவர்களாவர் என்றும் இவர்களைப்  பயங்கரவாதிகளாகவும் திருடர்களாகவும், கொள்ளைக்காரர்களாகவும் வர்ணித்தே, இந்த  வழக்கைச் சோடித்துள்ளனர் என்றும் தெரிவித்ததாக கூறினார்.

அதேநேரத்தில், தாக்குதல் சம்பவத்தை காணொளி எடுத்து, பேஸ்புக்கிலும் பரப்பியுள்ளனர் என்றும் அதில் கொள்ளை இடம்பெற்றதாக எந்தவோர் பதிவும் இல்லை என்றும் கூறினார்.

தாக்குதல் இடம்பெற்ற சம்பவத்தில், தோட்ட அதிகாரி பொலிஸ் நிலையத்தில் வழங்கியுள்ள முறைப்பாட்டில், திருட்டுச் சம்பவம் நிகழ்ந்ததாக எங்குமே பதிவு செய்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“சம்பள உரிமைக்குப் போராடியவர்களை முதலில் தாக்கியவர் தோட்ட  முகாமையாளரே. அவர் மீது பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால், இப்பிரச்சினை வலுப்பெற்றுள்ளது. மேலும், தொழிலாளர்கள் பயங்கரவாதிகள் அல்லர். இவ்வாறு அவர்களைப் பயங்கரவாதிகள் என வர்ணித்துப் பேசியதை வாபஸ் பெறவேண்டும்” என்றும் அவர் வாதாடியதாக கூறினார்.

அத்துடன், நீதிமன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இவர்களுக்குப் பிணை வழங்க வேண்டும் என்றும் இச்சந்தேகநபர்களில் அதிகமாக உழைக்கும் பெண்களே உள்ளனர் என்றும் பாடசாலை மாணவன் மற்றும் தந்தையை இழந்த பிள்ளைகளின் தாயும் இருக்கிறார் என்றும் வாதாடியதாக, சட்டத்தரணி தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணையின் அடுத்த தவணைகளின் போது, சந்தேகநபர்களாகக் காணப்பட்ட தொழிலாளர்கள் குற்றமற்றவர்கள் என்பதை, சாட்சிகள் மூலம் நிரூபித்து, வழக்கிலிந்து முற்றாக விடுவிக்க முடியும் என்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையே பிணை வழங்கலுக்குக் காரணமாக அமைந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .