2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

புனரமைப்பதற்காக உடைக்கப்பட்ட “சிவப்பு பாலம்”: மக்கள் நிர்க்கதி

Editorial   / 2025 ஜூன் 12 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த குமார்

இரத்தினபுரி மாவட்டத்தில், ஓப்பநாயக்க பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடவெல பகுதியில் “வே” கங்கையின் குறுக்கே உள்ள “சிவப்பு பாலம்” என்றழைக்கப்படும் பாலமானது உடைந்து காணப்படுவதால், அதனூடாக பயணிப்பதில் சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

ஆங்கிலேயர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட என அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படும் இந்த சிவப்பு பாலம் சேதமாகியுள்ளதாக தெரிவித்து, அதனை புனரமைக்கப் போவதாக கூறி கடந்த 7ஆம் திகதி பாலத்தினை உடைத்து அகற்றுவதற்கு பெல்மடுல்ல நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அந்த இடத்தில் மக்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக பாலம் ஒன்று அமைக்காமல், இந்த சிவப்பு பாலத்தினை உடைத்து, அகற்றியதால் அப்பாலத்தினூடாக பயணிக்கும் அக்கரெல்ல, உடகம, பரகாமடித்த, பின்னகலகந்த, வல்லகெட்டிய, ரங்வல ஆகிய பகுதிகளில் உள்ள 500கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பாலத்தினை உடைத்து அகற்றியதால் மேலே குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் பாடசாலை மாணவர்களின் பயணத்துக்காக போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் அரச பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களும் போக்குவரத்து மேற்கொள்ள முடியாமல் பல்வேறு இடையூறுகளை சந்தித்துள்ளன.

குறித்த பகுதிகளில் இருந்து இரத்தினபுரி, பெல்மடுல்ல, ஓப்பநாயக்க ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் செல்கின்றார்கள்.

மேலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சேவையில் ஈடுபடும் பலர் குறித்த பாலத்தினூடாக நாளாந்தம் பயணிக்கின்றபோது பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் “வே” கங்கையை கடப்பதற்காக, அங்கு தற்காலிகமாக கம்பிப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 9ஆம் திகதி இந்த கம்பிப் பாலத்தினூடாக சிலர் பயணித்தவேளையில் பாலத்தில் இணைக்கப்பட்டிருந்த கம்பியொன்று அறுந்த நிலையில், பாலம் உடைந்து தாழிறங்கியுள்ளது. அன்று முதல் தற்போது வரை கம்பி பாலம் உடைந்த நிலையிலேயே காணப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், அப்பகுதி மக்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தினூடாக பயணிக்காமல், மிகவும் ஆபத்தான முறையில் ஆற்றில் இறங்கி, கடந்து செல்கின்றார்கள்.

அந்த பகுதியில் மக்கள் பயமின்றி ஆற்றை கடந்து செல்வதற்கு, உரிய அதிகாரிகள் இது தொடர்பாக கவனம் செலுத்தி, சரியான முறையில் பாலத்தை புனரமைத்துத் தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .