Kogilavani / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
மலையகத்தில் நீடித்து வரும் சீரற்ற காலநிலைக் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மண்சரிவு அபாய எச்சரிக்கை பல்வேறு பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
காசல்ரீ நீர்தேக்கத்துக்கு அருகிலுள்ள ரொக்வூட் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதால் அப்பகுதியில் வாழும் 20 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் சனிக்கிழமை(17) இரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இத்தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதை பாதிப்படைந்துள்ளது. பாதையில் மண்மேடு குவிந்துள்ளதால் இத்தோட்ட மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
தற்போது மண்சரிவு ஏற்பட்டுள்ள இடத்துக்கு கீழ் பகுதியில் வசித்து வரும் குடும்பங்களே நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் வாழும் பகுதிக்கு கீழே நீர்த்தேக்கமும் அமைந்துள்ளதால் இம்மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
பாரிய மண்சரிவு ஏற்படின் இப்பகுதியில் வாழும் 20 குடும்பங்களும் நீர்தேக்கத்துக்குள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே இப்பகுதியில் இரண்டுமுறை மண்சரிவுகள் ஏற்பட்டதாகவும் கற்பாறைகள் காணப்படுகின்றன இடங்களிலே குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஹட்டன், சமனலகமவில் சனிக்கிழமை (17) இரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, 15 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள் தற்காலிகமாக வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இம்மணிசரிவுக் காரணமாக வீடொன்று சேதமடைந்துள்ளது. இப்பகுதியில் ஏற்கெனவே பல தடவைகள் மண்சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், பசறை, நமுனுகலை கொட்டுகாதென்ன பிரதேசத்தில் இன்று (18) ஏற்பட்ட மண்சரிவுக்காரணமாக அப்பகுதிக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. இந்நிலையில், பசறையிலிருந்து செல்லும் வாகனங்கள் அம்பலம்கம, பிபிலேகம வழியாக நமுனுகலைக்கும் நமுனுகலையிலிருந்து பசறைக்கு செல்லும் வாகனங்கள் பிபிலேக அம்பலகம வழியாக பசறைக்கும் செல்கின்றன. குறித்த பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு ஏற்பட்டு வருவதால் மண்ணை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மலையகத்தில் பெரும்பாலான நீர்தேக்கங்களின் நீர் மட்டம் 90 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
பிரதான நீர்தேக்கங்களான காசல்ரீ, மவுஸ்ஸாகலை, மேல்கொத்மலை, கெனியன், லக்ஷபான, நவலக்ஷபான, பொல்பிட்டிய போன்ற நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
எனவே, நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதால் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026