2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மலையக அபிவிருத்திக்கு “இந்திய அரசாங்கம் தொடர்ந்து உதவும்”

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் எஸ்.கணேசன்

மலையக மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கான அபிவிருத்திப் பணிகளுக்காக, இந்திய அரசாங்கம் தொடர்ந்து பங்களிப்பு வழங்கும் என்று, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

கம்பளைக் கல்வி வலயத்துக்கு உட்பட்ட புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில், இந்திய அரசாங்கத்தின் 95 மில்லியன் ரூபாய் நிதி உதவியில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில், பெருந்தோட்ட மக்களின் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, தொழில் பயிற்சிகள், மேலும் கல்விக்கான புலமைப் பரிசில் திட்டங்களுக்காக, இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளைச் செய்துவருகின்றது என்றார்.

அந்தவகையில், இந்திய அரசாங்கத்தின் 14 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில், முதற்கட்ட வீட்டுத் திட்டம், டன்சினன் தோட்ட மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியுடன், இவ்வீடுகளை மக்களின் பாவனைக்காகக் கையளிப்பதுத் தொடர்பில், இந்திய அரசாங்கம் பெருமையடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

புஸ்ஸல்லாவ சரஸ்வதி கல்லூரியின் அபிவிருத்திக்காக, இந்திய அரசாங்கம் 95 மில்லியன் ரூபாயை ஒதிக்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த நிதியின் ஊடாக, விஞ்ஞான கூடம், ஆசிரியர்கள் விடுதி, புதிய பாடசாலைக் கட்டடம் மற்றும் பழைய கட்டடங்களின் சீர்திருத்தம் உட்பட கல்லூரிக்கான உபகரணங்களும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன என அவர் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களைப் பட்டியலிட்டுக் கூறிய அவர், மத்திய, ஊவா மாகாணங்களுக்கு “1990 அவசர அம்புலன்ஸ் வண்டி” சேவையை இந்திய அரசு வழங்குவதுடன் யாழில் இச்சேவை, பிதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X