2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மலையக மக்களின் மேம்பாடுகளுக்கு பெருந்தோட்ட நிர்வாகமே தடை

Kogilavani   / 2017 செப்டெம்பர் 07 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பெருந்தோட்ட மக்களின் மேம்பாடுகளுக்கு, பெருந்தோட்ட நிர்வாகமே, பெருந்தடையாக இருந்து வருவதாக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

“பெருந்தோட்ட நிர்வாகத்தினர், தத்தம் பொறுப்புகளை உணர்ந்து, குறிப்பாக பெருந்தோட்டப் பாதைகளை புனரமைக்கும் வேலைத்திட்டங்களை மேற்கொள்வார்களேயானால்,  மக்கள் பிரதிநிதிகள், வீதிகளை புனரமைப்பதற்காக செலவிடும் பணத்தை, மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளுக்காக பயன்படுத்த முடியுமென்றும்” என்றும் அவர் கூறினார்.

மலையக மக்கள் முன்னணியின் பதுளைப் பிராந்திய அலுவலகக் கேட்போர் கூடத்தில், நேற்று முன்தினம் நடைபெற்ற தோட்டத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு இடையிலான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கூறிய அவர்,

“பதுளை மாவட்டத்திலுள்ள  பெருந்தோட்டங்களில், சுமார் ஐயாயிரம் கிலோ மீற்றர் தூரம் வரையிலான பாதைகளை புனரமைக்க வேண்டியுள்ளது. இதற்கென நாலாயிரம் மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுகிறது. எனது பன்முகப்படுத்தப்பட்ட  நிதியில் 90 சதவீதமான நிதி, பெருந்தோட்டப்பாதை சீரமைப்புக்கே பயன்படுத்தப்படுகின்றது.

“பெருந்தோட்டப்பாதைகளை,  தோட்ட நிர்வாகங்கள் புனரமைக்கும் பட்சத்தில், எமக்காக பன்முகப்படுத்தப்படும் நிதியை,  எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டு வேலைத் திட்டங்களுக்கு, பயன்பத்தக் கூடியதாக இருக்கும். ஆனால், பெருந்தோட்ட நிர்வாகங்கள் இலாபத்தை ஈட்டுவதிலும், தோட்ட வளங்களை சுரண்டுவதையுமே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. தொழிலாளர்களின் சேம நலன் குறித்தும் தேயிலைத் தோட்டங்களின்  பாராமரிப்புக் குறித்தும்,  தோட்டப் பாதைகளை சீரமைப்பது குறித்தும்  தோட்ட நிரர்வாகங்கள் எத்தகைய கவனமும் எடுப்பதில்லை.

“பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாடு, சிறுவர் பாராமரிப்பு நிலைய அபிவிருத்தி,  பாடசாலைகள் அபிவிருத்தி,  வைத்தியசாலை அபிவிருத்தி,  தொழிலாளர் குடும்பங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, தோட்டப் பாதை அபிவிருத்தி போன்ற இன்னோரன்ன அபிவிருத்தி வேலைத்திட்டங்களை, பெருந்தோட்ட மக்களின் மக்கள் பிரதிநிதிகளே மேற்கொண்டு வருகின்றனர். இவ் வேலைத்திட்டங்களை,  முன்னெடுக்கக் வேண்டிய பொறுப்புகளும்,  கடப்பாடுகளும் தோட்ட நிர்வாகங்களையே சார்ந்திருந்த போதிலும், தோட்ட நிர்வாகங்கள் அவைகள் எதனையும் செய்வதில்லை.

“ஆரம்பகாலங்களில், பெருந்தோட்ட மக்களுக்கு தேவையான அனைத்து வசதி வாய்ப்புகளையும், தோட்ட நிர்வாகங்களே மேற்கொண்டு வந்தன. தற்போது அந்நிலை மாறி, பெருந்தோட்ட மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும்,  மக்கள் பிரதிநிதிகளே செய்ய வேண்டுமென்ற நிலை ஏற்பட்டுள்ளது.

“மக்களும் அந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தோட்ட நிர்வாகங்களிடம் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், அதற்கு நிர்வாகங்கள் செவிமடுக்காமையால், மக்கள் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நிர்வாகங்களிடம் முன்வைக்கப்படும்  கோரிக்கைகள், 'செவிடன் காதில் ஊதிய சங்கு' போல் இருப்பதால், நிர்வாகங்கள் மீது மக்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்துள்ளனர். அதனால், நிர்வாகங்களிடம் சொல்லி என்ன பயன் கிடைக்க போகிறது என்று நினைத்து, மக்கள் தமது பிரதிநிதிகளை நாடி செல்லுகின்றனர்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .