2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மலையகக் கல்வி அபிவிருத்தியை ஆவணப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2018 ஜூன் 08 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

மலையக மக்களின் கல்வி அபிவிருத்தியை ஆவணப்படுத்தவும் மலையகக் கல்வியாளர்களை கௌரவிக்கும் வகையிலும் விசேட விழாவை, கல்வி இராஜாங்க அமைச்சு நடத்தவுள்ளது.

“மலையக வரலாற்றில் 200 வருடங்களை கடந்துவிட்ட நாம்,  எமது பயணத்தை திரும்பிப் பார்க்க வேண்டிய ஒரு நிலை இருக்கின்றோம். அந்தவகையில், கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடாக மலையகக் கல்வியின் முக்கியத்துவமும் 40 ஆண்டுகால கல்வி அபிவிருத்தி தொடர்பிலும் ஒரு விழாவை ஏற்பாடு செய்வதற்கு, நாம் தயராகி வருகின்றோம” என கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

“பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கல்வி அமைச்சினால் கண்டி இரஜவலை இந்து தேசிய கல்லூரியில்  நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடத்துடனான நூலகம் மற்றும் பாட அலகுகளுக்கான கட்டடத் தொகுதி என்பவற்றின் திறப்பு விழா, இன்று (8) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

 “27 வருடங்களுக்கு மேலான எனது அரசியல் வரலாற்றில், சுமார் 15 வருடங்களை நான் கல்வி அபிவிருத்திக்காகவே செலவிட்டிருக்கின்றேன். கல்வி பணிக்காக இன்னும் ஆற்ற வேண்டிய பொறுப்பு நிறையவே உள்ளது. மலையகக் கல்வியைப் பொறுத்த அளவில் நாம் கடந்த 40 வருடங்களாக  முன்னேற்றமடைந்துள்ளோம்.

“இதனை ஆவணப்படுத்தும் நோக்கத்துடனும் எமது மலையகக் கல்வியலாளர்களை கௌரவிக்கின்ற வகையிலும் ஒரு சிறந்த விழாவை ஏற்பாடு செய்வதற்கு கல்வி இராஜாங்க அமைச்சு தயாராகி வருகின்றது.

“இந்த விழாவில், மலையக கல்விமான்கள் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் சாதித்தவர்களை அழைப்பதற்கும் இலங்கையில் இருக்கின்ற தமிழ்மொழி மூல பாடசாலை அதிபர்களை இணைத்துக் கொள்வதற்கும் நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

“இன்று இலங்கையில் பல்வேறு விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம். பாட நூல்களில் கூட விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதை கடந்த காலங்களில் கண்டறிந்து அதனை திருத்தி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். எனவே, எமது சமூகத்தின் தகவல்களை ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பு எம்மைச் சாரும்” என்று அவர் மேலும் கூறினார்.

பாடசாலையின் அதிபர் எஸ்.மயில்வாகனம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், மத்திய மாகாண சபைத்தலைவர் துரை மதியுகராஜா, கண்டி மாநகர சபை உறுப்பினர் பி.விக்ணேஸ்வரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X