Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 14 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.கேதீஸ்
“இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்கள் மீது, மீண்டும் இந்திய அடையாளத்தைப் பதித்து, அவர்களை மீண்டும் நாடற்றவர்களாக்கும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம்” என, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் கோரிக்கை விடுத்தார்.
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தனி வீடுகளுக்கு முழு உரித்துடனான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு கட்டமாக, கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட குயின்ஸ்பெரி தோட்டக் குடியிருப்பாளர்கள் 23 பேருக்கு காணி உறுதி வழங்கிவைக்கும் நிகழ்வு, அண்மையில் கொத்மலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கோரினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
“இன்றைக்கு தொன்னூறு வருடங்களுக்கு முன்பே அரசியல் உரிமையை வென்றெடுத்த மலையக மக்களுக்கு, இந்த ஆண்டுதான் காணியுரிமை கிடைத்திருக்கிறது. இதற்கு முன்னர் லயன் அறைகளை சொந்தமாக்குவதாக கடிதங்களை பெற்றுக்கொடுத்த அரசியல்வாதிகள் செயற்பட்ட மலையகத்தில், அமைச்சர் திகாம்பரம் காலத்தில் தான் தோட்டத் தொழிலாளர்களுக்குரிய தனி வீடுகளுக்கான முழு உரித்துடனான காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படுகின்றது. இது வரலாற்று சாதனையாகும்.
“மலையக மக்களின் அரசியல் வரலாறு நீண்டது. 200 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை நாட்டுக்கு கூலிகளாக அழைத்து வரப்பட்ட மக்கள், தமது நூறாவது ஆண்டிலேயே தொழிற்சங்க, அரசியல் ரீதியாக தமது அடியை எடுத்துவைத்தனர்.
“வாக்குரிமை போராட்டத்தையே மலையகத்தின் முதல் அரசியல் போராட்டமாகக் காட்ட முனைவது வரலாற்றை தவறாக திரிபுபடுத்துவதாகிவிடும். அவரவர் வசதிக்கு ஏற்ப வரலாறு வளைந்துகொடுக்காது. எது உண்மையோ அது என்றோ ஒருநாள் வெளிப்பட்டுத் தீரும். மலையக தோட்டத் தொழிலாள மக்களுக்கு முழு உரித்துடனான காணியுரிமைபெற்றுக்கொடுக்கப்பட்ட வரலாற்றுப்பதிவையும் எவராலும் திரிபுபடுத்த முடியாது. இந்த வரலாற்றுச் சாதனைகளை திசை திருப்ப பெயர் மாற்ற நாடகங்களை சிலர் அரங்கேற்றி வருகின்றனர்.
“அதிகளவான தியாகங்களும் விட்டுக்கொடுப்புகளும் செய்து இலங்கை நாட்டில் இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்கள் இப்போது உறுதிபெற்று வருகின்றனர். இவர்கள் மீது மீண்டும் இந்திய அடையாளத்தைப் பதித்து, அவர்களை மீண்டும் நாடற்றவர்களாக்கும் முயற்சியில் யாரும் இறங்க முற்படக்கூடாது.
இலங்கைக்கு வந்து இருநூறு ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போது தான் காணியுரிமையை இலங்கையில் பெறுகின்றனர். உள்ளூராட்சி அதிகார ஆட்சியில் பங்கேற்கும் உரிமையைப் பெறுகின்றனர். இவற்றை இல்லாமலாக்க, ஒரு போதும் இடமளிக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago