2025 ஜூலை 23, புதன்கிழமை

’மலையகத்தில் வீடு கட்டுவதாகக் கூறி விளம்பரம் செய்கின்றனர்’

மு.இராமச்சந்திரன்   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

'மலையக மக்களுக்காக, தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பதாகக் கூறி, விளம்பரம் மட்டுமே செகின்றார். கடந்த இரண்டரை வருட காலப்பகுதியில், இதுவரை 1,100 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன' என்று, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

“மலையகத்தில் புதிய கிராமங்களை அமைப்பதற்கென ஓர் அமைச்சு இயங்கி வருகின்றது. இந்த அமைச்சால் மலையகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1,100ஐ தாண்டவில்லை. இதேவேளை, இந்த அமைச்சு இதுவரை எத்தனை கிராமங்களை உருவாக்கியுள்ளது என்பதும் எவருக்கும் தெரியாது. கிராமம் என்பது முழு தோட்ட லயன்களுக்கும் பதிலாக சகல வசதிகளையும் கொண்ட குடியிருப்பு தொகுதியை உருவாக்குவதேத் தவிர, 20 வீடுகளைக் கட்டிக்கொடுத்துவிட்டு அதற்கு பெயர் சூட்டுவது அல்ல.
இந்த அமைச்சு, வீடுகள் கட்டுவதாக விளம்பரம் செய்யும் வேகத்தை வீடுகள் கட்டுவதில் காட்டவில்லை. ஐந்து வருடங்களில் ஐம்பதாயிரம் வீடுகளை கட்டப்போவதாக கூறியவர்கள், இரண்டரை வருடங்களில் எத்தனை வீடுகளை கையளித்தார்கள் என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

தொழிற்சங்கத்துக்கு அங்கத்தவர்களை அதிகரித்துக் கொள்வதற்காக ஜனவரி, ஜூன் மாதங்களில் பல தோட்டங்களில் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டன. ஆனால், அபிவிருத்திப் பணிகள் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. தமது தொழிற்சங்கத்தில் அங்கத்தவராக சேர்ந்தால் மாத்திரமே, வீடமைப்புத் திட்டத்தில் பெயர் சேர்த்துக்கொள்ளப்படுமென கூறி அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல தோட்டங்களில் ஒரு குறிப்பிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வீடமைப்புத் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். பல தோட்டங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகள் எவ்வளவு காலத்துக்கு தாக்குப்பிடிக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

கட்டி முடிக்க முன்னரே அடித்தளம், சுவர்களில் பாரிய வெடிப்புக்கள் காணப்படுகின்றன. மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டத்துக்கு ஒரு பகுதி நிதி, தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியை பிணையாக வைத்து வட்டிக்கு வழங்கப்பட்ட கடன் மூலம் பயன்படுத்தப்படுகின்றது. இதனால், தரமற்ற வீடுகளை வழங்கி தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கு இடமளிக்க முடியாது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .