2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

’மாதாந்தச் சம்பளத்தை உரிய தினங்களில் வழங்குக’

Editorial   / 2018 மே 06 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.செல்வராஜா

ஆசிரிய சேவைக்கு உள்வாங்கும் பொருட்டு, கல்லூரிகளில் பயிற்சிபெற்று வரும் ஆசிரிய உதவியாளர்களுக்கான மாதாந்தச் சம்பளம், உரிய தினங்களில் வழங்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், இதனால், ஆசிரிய உதவியாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

எனவே, இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி, அவர்களுக்கான மாதாந்தச் சம்பளத்தை உரிய தினங்களில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி, ஊவா மாகாண கல்விப் பணிப்பாளருக்கு, அவசர கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கடிதத்தின் பிரதிகள், ஊவா மாகாண ஆளுநர் பி.பி.திசாநாயக்க, மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல, மாகாணத்தின் அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

“ஊவா மாகாணத்துக்கு உட்பட்ட தமிழ்ப் பாடசாலைகளில், ஆசிரிய உதவியாளர்கள் பலர் சேவையாற்றி வருகின்றனர். இவர்கள், ஆசிரிய சேவைக்கு உள்வாங்கும் பொருட்டு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கோப்பாய், கொட்டகலை, அட்டாளைச்சேனை ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கான மாதாந்தச் சம்பளம் உரிய தினங்களில் கிடைக்காமையால், பெரும் காலதாமதங்கள் ஏற்பட்டு வருகின்றன” என்று, அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ஆசிரிய உதவியாளர்கள், பயிற்சி பெறும் இடங்களிலிருந்து சம்பளம் வழங்கும் ஆவணங்கள் தாமதமானதாலேயே, உரிய தினத்தில் சம்பளம் வழங்க முடியாமலிருப்பதாக, வலய கல்விப் பணிமனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதெனச் சுட்டிக்காட்டிய அவர், இது குறித்து, ஆசிரிய பயிற்சி கல்லூரிகளில் வினவியதாகவும் தெரிவித்தார். ஆனால், இதனை மறுத்துள்ள கல்லூரிகள், தங்கள் தரப்பில் எதுவும் தாமதம் இல்லையென்றும் அறிவித்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விரு தரப்பினருமே, மாற்றி மாற்றி பந்தை எறிவதாகச் சாடிய அவர், ஆசிரிய பயிலுநர்களுடைய பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்படுவதாகத் தெரியவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

எனவே, இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், உரிய தினத்தில் ஆசிரிய உதவியாளர்கள் சம்பளத்தைப' பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X