2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

’லங்காரா’ வடிவமைப்பு கண்காட்சி

R.Tharaniya   / 2025 நவம்பர் 25 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் ஸ்திரமடைந்துள்ளதன் காரணமாக, அண்மைக் காலத்தில் முதலீட்டுச் சபைக்கு (BOI) கிடைத்த நேரடி முதலீட்டுத் தொகை  ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, தெரிவித்துள்ளார்.

தேசிய வடிவமைப்பு மையம் (Kandy City Center) 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி  வரை  ஏற்பாடு செய்திருந்த 'லங்காரா' வடிவமைப்பு கண்காட்சியைத் திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அரச நிறுவனங்களின் எதிர்காலம் குறித்து முன்வைத்த அமைச்சர், இந்த பாரிய முதலீட்டு வரவு, இந்த ஆண்டில் ஏற்றுமதி இலக்குகளைக் கட்டாயம்  தாண்டிச் செல்லும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.

எமது நாட்டின் எந்த ஒரு அரச நிறுவனத்தையும் விற்பனை செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை. அரச நிறுவனங்களை விற்பதற்கான மக்கள் ஆணை எங்களிடம் இல்லை, என வலியுறுத்திக்கூறினார்.

அரசாங்கத்தின் கொள்கை என்பது, அரசு, தனியார் மற்றும் மக்கள் பங்கேற்புடன் கூடிய கூட்டு முயற்சியின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகும். உற்பத்திப் பொருளாதாரத்தில் மக்கள் பங்கேற்க ஒரு வலுவான தனியார் துறை அத்தியாவசியம் என்றும், அரச நிறுவனங்கள் விற்கப்பட்டது என்றும்,

அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து தான் செயல்படும் என்று  கூறிய அமைச்சர் இது தனியார்மயமாக்கல் அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.அரச மற்றும் தனியார் முதலீடுகளைப் பெற்று, நாட்டின் முக்கியமான வளங்களை மேம்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, எப்பாவலை பொஸ்பேட், கஹட்டகஹா கிராஃபைட் சுரங்கம் மற்றும் கனிம மண் அகழ்வு பணிகளுக்காக முதலீட்டாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

கடந்த காலத்தில் லங்கா சீனி நிறுவனம், இரத்தினக்கல் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்கள் நட்டம் அடைந்ததற்கு காரணம் அரசியல் தலையீடுகள் என்றும்,  நண்பர்களைச் சேர்ப்பது, இயந்திரங்களை அகற்றுவது, உற்பத்திப் பொருட்களை நட்டத்துக்கு விற்பது போன்ற நடவடிக்கைகளால் ஏற்பட்ட அழிவைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது,

கஹட்டகஹா சுரங்கத்தில் உள்ள கிராஃபைட்டின் காபன் கலவை 99.99% வரை உயர் மட்டத்தில் உள்ளது எனக் குறிப்பிட்ட அமைச்சர், இதற்குத் தொழில்நுட்பத்தை சேர்த்து மதிப்பை உயர்த்துவதற்கு மட்டுமே முதலீடுகள் கோரப்பட்டுள்ளன என்றார்.

முதலீடுகள் அதிகரித்ததற்கான சூழலை விளக்கிய அமைச்சர், இன்று நாட்டில் சட்டத்தின் சுதந்திரம் உள்ளது, சட்டம் அனைவருக்கும் சமமானது, அரசியல் சூழல் நிலையாக உள்ளது, மற்றும் வட்டி வீதங்கள் தேவையற்ற வகையில் ஏற்ற இறக்கம் அடைவதில்லை ஆகியவையே இதற்குக் காரணம் என்று சுட்டிக்காட்டினார்.

கடந்த காலத்தில் சட்டத்தின் ஆதிக்கம் இல்லாததாலும், அரசியல் சூழல் சாதகமற்று இருந்தாலும் முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு சென்றதாகவும் அவர் நினைவுபடுத்தினார். நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கையில் நிலைத்தன்மை நிலவுவதாகவும், இதை மேலும் மேம்படுத்தச் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த ஆண்டு செயல்படுத்தப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலைகள், நகர்புற நீர் முகாமைத்துவ திட்டம், குடிநீர் மற்றும் மின்சாரத் திட்டங்கள் போன்ற அபிவிருத்திப் பணிகள் முதலீட்டாளர்களுக்கு மேலும் சாதகமான சூழலை உருவாக்கப்படும்  என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

எம்.ஏ.அமீனுல்லா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X