2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வீட்டு வேலை தொழிலாளர்களுக்கும் “தொழில் உரிமைகள் வேண்டும்”

Kogilavani   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

வீட்டு வேலைத் தொழிலாளர்களது தொழிலை, சட்ட ரீதியாக பாதுகாப்பதற்கு அரசாங்கம் எந்தவிதமான சட்டத்தையும் அறிமுகப்படுத்தாததால், வீட்டு வேலைத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக, வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவி ராஜகோபால் சத்யவானி ​தெரிவித்தார்.

“வீட்டு வேலைத் தொழிலாளர்களும் ஏனைய தொழிற்றுறைகளில் உள்ளவர்களைப் போன்று, சகல உரிமைகளையும் அனுபவிக்க வேண்டும். அதற்கான சட்ட ஏற்பாடுகள், நடைமுறைக்கு வரவேண்டும்” என்றும் அவர் கோரினார்.

வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம், கண்டி ஈ.எல்.சேனாநாயக்க நூலகக் கேட்போர் கூடத்தில், ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“வீட்டு வேலைத் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு, இலங்கையில் எந்தவிதமான சட்ட ஏற்பாடுகளும் இல்லை. இவர்களுக்கு எவ்வித தொழில் உரிமைகளும் இல்லை. வேலை நேர ஒழுங்கு என்பது கிடையாது. இவர்களுக்கு ஆகக் குறைந்த வேதனமே வழங்கப்படுகின்றது.

மேலதிக நேரக் கொடுப்பணவு கிடையாது. ஏனைய தொழிலாளர்களுக்கு கிடைக்கும் எந்தவொரு விடுமுறையும் இந்தத் தொழிலாளர்களுக்கு கிடைப்பது இல்லை.

அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள் எதுவும் இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இந்தத் தொழிலில் ஈடுபடும் பெண்களில் அநேகமானவர்கள், பாலியல் வன்முறைகளுக்கும் உள்ளாகின்றனர்.

இலங்கையில் ஏனைய தொழிற்றுறைகளில், தொழில் உரிமைகள் மீறப்படும்போது, அதற்கெதிராக போராட்டங்கள் வெடிக்கின்றன.

ஒரு சிற்றூழியருக்கு திட்டும் விழும் எனில், அதற்கெதிராக பாரிய போராட்டங்கள் வெடிக்கும். ஆனால், வீட்டு வேலைத் தொழிலாளர்கள் கடுமையான வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டாலும்கூட, அவர்களுக்கு எதிராக குரல்கொடுக்க ஒருவரும் முன்வருவதில்லை.

அரசாங்கம், வெளியிட்டுள்ள குறைந்தப்பட்ச சம்பளம் தொடர்பான சட்ட மூலத்தில், “வீட்டுவேலை தொழில் இதில் அடங்காது” என்று குறிப்பிடப்பட்டுள்ளமையே, இதற்கு மூலக் காரணமாகும்.

இந்நிலைமை மாற்றியமைக்கப்படல் வேண்டும். வீட்டு வேலைத் தொழிலாளர்களும் ஏனைய தொழிற்றுறைகளில் உள்ளவர்களைப் போன்று சகல உரிமைகளை அனுபவிக்க வேண்டும். அதற்கான சட்ட ஏற்பாடுகள், நடைமுறைக்கு வரவேண்டும். எமக்கு தொழில் உரிமைகள் வழங்கப்படாவிட்டால், சங்கத்தில் உறுப்புரிமைப் பெற்றுள்ள அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றுத்திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

“போராட்டத்தில் ஈடுபடுவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை” என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .