2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வஞ்சிக்க வேண்டாம்

Freelancer   / 2022 ஜூலை 05 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அதற்கான பதில்கள் மற்றும் மக்கள் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை அரசாங்கத்தின் காதுகளுக்கும், பதில்களை மக்களின் காதுக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் மிகமுக்கியமான பங்கு ஊடகத்துறையைச் சார்ந்ததாகும் எனத் தெரிவித்துள்ள நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் ஊடகவியலாளருமான சுப்பிரமணியம் தியாகு, ஊடகவியலாளர்களுக்கு முறையாக எரிபொருள் கிடைப்பதற்கு வழிசமைக்க வேண்டுமென கோரியுள்ளார். 

அத்தியாவசிய சேவையாக ஊடகத்துறையையும் கருதி முறையான திட்டமொன்றை அரசாங்கம் வகுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள அவர், பல மணித்தியாலங்களாக அல்லது பல நாட்களாக வரிசைகளில் நின்று எரிபொருட்களை பெற்றுக் கொள்ள ஊடகவியலாளர்களால் முடியாது. ஏனெனில் இரவு, பகல் பாராது களத்தில் நிற்பதால், வரிசையில் நின்று காலத்தை வீணடிக்க முடியாது என்றார். 

ஹட்டன் ஸ்ரீ கிருஸ்ண பவானில் நேற்று (04) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், ஊடகவியலாளர்கள் எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்கு எந்தவிதமான திட்டமும் அரசாங்கத்திடம் இல்லையென குற்றஞ்சாட்டினார். 

அநேகமான சேவைகளை அரசாங்கம் அத்தியாவசிய தேவைகளாக பிரகடனப்படுத்தியுள்ளது. ஆனால் ஊடகத்துறையை அத்தியாவசிய தேவையாக கருதுகின்றதா?என்ற கேள்வி எமக்கு எழுகின்றது என்றார். 
 
அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் ஊடாக, ஊடகவியலாளர்களுக்கான  எரிபொருட்களை மிகவும் இலகுவான முறையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியும். 

பிரதேச ஊடகவியலாளர்களால் ஓரிடத்தில் இருந்துகொண்டு செய்திகளை சேகரித்து ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பமுடியாது. கட்டாயமாக களத்துக்குக் செல்லவே வேண்டும். எரிபொருள்கள் இன்மையால், களத்துக்குக் செல்லமுடியாத துர்ப்பாக்கிய நிலைமையொன்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த சுப்பிரமணியம் தியாகு, ஊடகவியலாளர்களுக்கு எரிபொருள் கிடைக்கும் வகையில் முறையான திட்டமொன்றை அரசாங்கம் தயாரிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X