Editorial / 2018 மார்ச் 25 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினர் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை, சுலபமாக தோல்வியடையச் செய்வோமெனத் தெரிவித்த அரச முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்வரும் 4ஆம் திகதியன்று, தாம் வெற்றிபெறுவதாக உறுதியளித்தார்.
கண்டி அவன்ஹல மண்டபத்தில், நேற்று (24) இடம்பெற்ற உள்ளூராட்சிமன்றங்களுக்காக, கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஐ.தே.க அங்கத்தவர்களது சத்தியப்பிரமாண வைபவத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தான் நாடாளுமன்றில் இருக்கும் போது, நம்பிக்கையில்லாப் பிரேரணை பற்றி ஒரு பேச்சு அடிபட்டதாகவும் அப்போது ஒரு சில அங்கத்தவர்கள், தாம் நம்பிக்கைத் தெரிவித்து, ஒரு பிரேரணை முன்வைப்போமென்று கூறியதாகவும் கூறினார்.
உடனே வெறும் 15 நிமிடங்களில், 85 பேர், பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டனர். ஏனைய 15 பேர் வெளிநாடுகளில் இருந்தனர். அவர்கள் மின்னஞ்சல் ஊடாக தமது ஆதரவைத் தெரிவித்தனரென்றும், அவர் கூறினார்.
இவ்வாறு 15 நிமிடங்களில், 100 பேர் ஆதரவு தெரிவித்துள்ளரென்று குறிப்பிட்ட அவர், மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாம் தோல்வியடையச் செய்து, பிரதமரைப் பாதுகாப்பதாகக் கூறினார்.
இலங்கை வரலாற்றில், பல்வேறு அரசியல் தலைவர்களது முதற் பிரவேசம், கொழும்பு மாநகர சபையாக இருந்துள்ளதெனத் தெரிவித்த அமைச்சர், தானும் கண்டி மாநகர சபையினுடாகவே அரசியலுக்குப் பிரவேசித்ததாகக் குறிப்பிட்டார்.
எனவே, உள்ளூராட்சிமன்றங்கள் என்பன, நீண்ட அரசியல் பிரவேசத்தின் ஓர் ஆரம்பப் படியாகும். தற்போது தெரிவாகியுள்ள பிரதேச சபை அங்கத்தவர்கள், தமது வெற்றியைச் சாதாரண வெற்றியாகக் கொள்ளாது, நீண்ட அரசியல் பயணத்தின் முதற்படி என்பதை நினைவில் வைத்து, தமது பணிகளைத் தொடருமாறு தெரிவித்தார்.
மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அநேக அங்கத்தவர்களை அலைபேசியூடாகத் தான் தொடர்புகொள்ள முயற்சித்த போது, அவை செயலிழந்து காணப்பட்டதாகவும் தயவுசெய்து, அலைபேசிகளைச் செயலிழக்கச் செய்ய வேண்டாமென்றும் கோரினார்.
பொதுமக்கள், முன்னர் போன்று உங்கள் வீடு தேடி வரமாட்டார்கள். அலைபேசி மூலம்தான் பிரச்சினைகளைச் சொல்வார்கள். அதற்கு, நீங்கள் பதிலளித்தால், உங்கள் பயணம் தொடருமெனத் தெரிவித்த அமைச்சர், அலைபேசி என்பது, தற்காலத்தின் அரசியல் செயற்பாடென்பதை மறக்க வேண்டாமெனவும் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago