2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

ஹேரனவெல மக்களுக்கு ஆபத்து

Gavitha   / 2020 நவம்பர் 25 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

ஹாலி-எலைப் பகுதியின் ஹேரனவெல எனும் கிராமத்தில் கருங்கற்கள் உடைக்கும் தொழிற்சாலையொன்று இயங்கி வருவதால், அக்கிராம மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்றும் எனவே, இந்த கருங்கற்கள் உடைக்கும் தொழிற்சாலையை அங்கிருந்து அகற்றி, மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் படி, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகமைக்கு அனுப்பியுள்ள கடிதமொன்றிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இக்கிராமத்தில், முன்பள்ளி, வணக்கஸ்தலம், சமூக சேவை நிலையம், விளையாட்டு மைதானம், வீடுகள் ஆகியவை அமைந்துள்ள இடத்திலேயே, கற்பாறைத் தொகுதியும் அதையொட்டி, கருங்கற்கள் உடைக்கும் தொழிலும் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமும், இங்கு கற்பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவதும், கருங்கற்கள் உடைக்கப்படுவதும், உடைக்கப்பட்ட கருங்கற்கள் லொறிகளில் ஏற்றிச் செல்வதும் வழக்கமாகவே, இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கற்பாறைகள் வெடிகள் வைத்து தகர்க்கப்படுவதால், கற்சிதறல்கள் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு சிதறிவிடுவதாகவும் இதனால், வீடுகள், முன்பள்ளி, வணக்கஸ்தலம், சமூக சேவை நிலையங்கள் ஆகியவற்றின் கூரைகள் உடைவதுடன், வெடி அதிர்வால், அதன் சுவர்களில் பாரிய வெடிப்புக்களும் ஏற்படுவதாகவும் இதனால், இக்கிராமத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதனால் அக்கிராமத்தின் சுற்றாடல் மாசடைவதாகவும் ஊற்றுக்களும் வற்றிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள அவர், விளையாட்டு மைதானத்தில் விளையாடும் சிறுவர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்தி, அங்குள்ள மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக, பதுளை மாவட்ட அரச அதிபரைத் தொடர்பு கொண்டு வினவியபோது, மக்களின் நலன் கருதிய இவ் விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஹாலி -எலை பிரதேச செயலாளரைப் பணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X