2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'ஜி.எஸ்.பி+ஐப் பெற பல கடவைகள் கடக்க வேண்டும்'

Thipaan   / 2017 ஜனவரி 16 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி+ வரி சலுகைகளைப் பெற, இலங்கை அரசாங்கம், இன்னும் பல கடவைகளைக் கடக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இருக்கின்றது. தற்போது நிகழ்ந்திருப்பது இதுபற்றிய ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஒரு சிபாரிசே தவிர, இறுதி முடிவு அல்ல. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இது பற்றி  விவாதிக்கப்பட்டு உரிய முடிவு இன்னமும் சுமார் நான்கு மாதங்களின் பின் அறிவிக்கப்படும்” என,  தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டுங்-லை-மார்க் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய கருத்தறியும் தூதுக்குழு  அமைச்சர் மனோ கணேசனை அவரது அமைச்சில் சந்தித்து இன்று உரையாடியது. இது தொடர்பில் அமைச்சர் கணேசன் ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது,     

“அமைச்சரவையில் இப்போது விவாதிக்கப்பட்டு வரும் மனித உரிமை நடவடிக்கைத் திட்டம், ஜெனீவாவில் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள், பயங்கரவாத தடுப்புச் சட்ட நீக்கம், காணாமல் போனோர் அலுவலக அமைவு, மனோரி முத்தெடுவகம குழுவின் அறிக்கை ஆகிய விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசு எடுத்துவரும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை பொறுத்தே ஜி.எஸ்.பி+ வரி சலுகைகள் வழங்கப்படுவதில் இறுதி முடிவு தங்கியுள்ளது என்ற நிலைப்பாட்டிலேயே தான் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டுங்-லை-மார்க் என்னுடன் தெரிவித்தார்.  

இந்நாட்டில் மொழியுரிமை தொடர்பாகவும், சமூகங்களுக்கு இடையே கலந்துரையாடலை ஏற்படுத்துவது தொடர்பாகவும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகள் தேவைப்படுவதாக நான் எடுத்துக் கூறினேன். இதை ஏற்றுக்கொண்ட தூதுவர், இலங்கை அரசுக்கு உதவிடும் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் கொள்கையளவில் எடுத்துள்ளது. அமைச்சரின் வெளிப்படையான கருத்துகள் என்னை  கவர்கின்றன. எனவே ஐரோப்பிய ஒன்றிய உதவி பட்டியலில் மொழியுரிமை, கலந்துரையாடல் ஆகிய விவகாரங்கள் இடம்பெறுவது தொடர்பில் நாம் உங்கள் அமைச்சுடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்தி உரிய முடிவுகளை எடுக்கவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X