2025 மே 07, புதன்கிழமை

‘தேர்தலைத் தாமதப்படுத்துவது இழுக்காகும்’

Princiya Dixci   / 2016 நவம்பர் 14 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத்தேர்தலை தொடர்ந்தும் காலதாமதப்படுத்த வேண்டாமெனவும், அந்தத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு ஆவண செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சி.வை.பி.ராம், மக்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கின்ற இந்தத் தேர்தலை தாமதப்படுத்துவது நல்லாட்சிக்கு இழுக்காகும் என்றும் தெரிவித்துள்ளார்.  

இந்த விவகாரம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்ந்தும் காலதாமதப்படுத்தப்படுவது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உள்ளூராட்சி மன்றங்களே மக்களின் அன்றாட வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பைக்கொண்ட நிர்வாகக்கட்டமைப்பாகும். இந்நிலையில், அனைத்து உள்ளுராட்சி மன்றங்களினதும் காலவரையறை நிறைவுக்கு வந்துள்ளது.  

தற்போது வரையில் அவற்றுக்கான தேர்தலை நடத்துவது குறித்து தொடர்ந்தும் இழுபறி நிலைமைகளே காணப்படுகின்றன. குறிப்பாக உள்ளூராட்சி மன்றத்தேர்தலை எந்தத்தேர்தல் முறைமையில் நடத்துவது என்பது குறித்து பிரதான இரு கட்சிகளிடையேயும் சிறுபான்மை அரசியல் கட்சிகளிடையேயும் முன்னுக்குப்பின் முரணான நிலைமைகளே உள்ளன.  

மறுபக்கத்தில் எல்லை மீள்நிர்ணயப்பணிகள் முழுமை பெறாததன் காரணத்தால் தேர்தலை நடத்துவதற்கு தாமதமான நிலைமைகள் நீடிப்பதாக மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சு குறிப்பிடுகின்றது.  

இதேநேரம், தேர்தல்கள் உரியகாலப்பகுதியில் நடத்தப்படாமையானது மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.  

உள்ளூராட்சி மன்றங்களின் காலம் நிறைவடைந்ததன் காரணத்தால் தற்போது பொதுமக்களின் அன்றாட நிருவாக செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்ந்தும் தாமதமடைந்து வருகின்ற நிலைமையே காணப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.  

இவ்வாறு நிலைமைகள் காணப்படுகின்ற நிலையில் ஜனநாயகத்தை நிலைநாட்டி நல்லாட்சியை முன்னெடுக்கும் ஒரே இலக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை தோற்றுவித்த தாங்கள் (பிரதமர்) இதற்குரிய தீர்வொன்றை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X