2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தியில் கவனம் செலுத்துவது அவசியம்'

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நச்சுத்தன்மையற்ற நாடு தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நாடெங்கிலும் நடைமுறைப்படுத்தி அரசாங்கம் நாட்டில் ஓர் ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்பும் மிகப் பெரும் பொறுப்பை நிறைவேற்றி வருகின்றது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

எனவே, அந்த நிகழ்ச்சித்திட்டங்களுடன் எல்லாத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை (07) பிற்பகல் இடம்பெற்ற 'நச்சுத்தன்மையற்ற நாடு' தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு கடினமாக இருப்பதற்குக் காரணம், பல்தேசிய நிறுவனங்கள் முன்னெடுத்துவரும் பாரிய பிரச்சார உத்திகளாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவற்றைத் தோற்கடித்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்குமான நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு எல்லா ஊடக நிறுவனங்களும் கவனம்செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

எமக்கு கிருமிநாசினிகளை அறிமுகப்படுத்திய உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள் இன்று அவற்றின் இடர்நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு அவற்றிலிருந்து படிப்படியாக நீங்கிவருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டு மக்களின் ஆரோக்கியத்துக்கு சவாலாக அமைந்துள்ள கிருமிநாசினிகள், இரசாயன உரங்கள் போன்றவற்றிலிருந்து படிப்படியாக நீங்க நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தி செயன்முறை தொடர்பில் கவனம்செலுத்துவது முக்கியமானதாகும் என்றும் குறிப்பிட்டார்.

முழு நாட்டையும் நச்சுத்தன்மையற்ற ஒரு நாடாக மாற்றி நாட்டையும் மக்களையும் ஆரோக்கியமான முறையில் கட்டியெழுப்பி நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கு ஏற்றவகையில் நச்சுத்தன்மையற்ற ஒரு நாடு, மூன்று ஆண்டு திட்டம், 2016 மார்ச் மாதம் 07ஆம் திகதி, மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஆரம்பமானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X