A.P.Mathan / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
இலங்கையில் தமிழ் மக்கள் பல்வேறு காலங்களிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள், எதிர்கொள்கிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. அதேநேரம் தந்திரோபாய ரீதியான அரசியல் நகர்வினை விடுத்து தொடர்ச்சியாக எதிர்ப்பு அரசியல் செய்வதனால் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப் போவது எதுவுமில்லை. எனவே, கொழும்பு மாநகர சபை தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தலைமையில் ஆளும் தரப்பில் களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களை ஆதரித்து தலைநகர மக்கள் சேவையை பெற்றுக்கொள்ள முனைய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பி.திகாம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு பொதுவான பிரச்சினைகளும் தனித்துவமான பிரச்சினைகளும் உள்ளன. வன்னியில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கொழும்பில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளோடு ஒப்பிடமுடியாது.
கொழும்பில் பல்லின மக்களோடு சேர்ந்து வாழும் தமிழ் மக்கள் இன நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வினையும் உடையவர்களாக இருக்க வேண்டும். தேசிய அரசியல் சார்ந்த அரசியல் கருத்துக்களை உள்ளூராட்சி மன்ற தேர்தல் களத்தில் வாதிப்பது நடைமுறைச் சாத்தியமற்ற அரசியல் செயற்பாடு ஆகும். புரிந்துணர்வு அடிப்படையில் வன்னி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது கடினமானதாக இருக்கலாம். அவர்களது கோரிக்கையின் தன்மை அப்படியானது.
ஆனால் தலைநகர மக்கள் தமது தேவைகளை அரசாங்கத்துடனான புரிந்துணர்வு அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கு தேசிய அரசியல் நிலைவரங்களைக் காரணம் காட்டுவது பொருத்தமாகாது. இந்த நடைமுறை நிலைப்பாட்டிற்கு தலைநகர் வாழ் வர்த்தக சமூகம் வந்தவிட்டது என்றே நான் நினைக்கிறேன். ஜனாதிபதி அவர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்து தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கும் வர்த்தக சமூகத்தினர் நாட்டை அபிவிருத்தி செய்வதில் தமது பங்களிப்பையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இந்த செயற்பாடுகளுக்கு பலமளிக்கும் ஒரு முயற்சியாகவே இன்று பிரபா கணேசன் அவர்களின் துணிச்சலான அரசியல் முன்னெடுப்பு அமைகின்றது.
தலைநகரில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கொழும்பு மாநகர சபையை வெற்றிகொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் நிலவுகின்ற நிலையில் ஆளும்தரப்புடன் இணைந்து போட்டியிடுவதன் மூலம் தலைநகர் வாழ் தமிழ் மக்கள் கோரிக்கைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் சாதூரியமாக தீர்வு காணும் அரசியல் முனைப்பினை நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் முன்னெடுத்துள்ளார். எனவே கொழும்பு மாநகர பிரதேச எல்லைக்கு உட்பட்ட தமிழ் பேசும் மக்கள் உணர்ச்சிவசப்பட்ட அரசியல் பேச்சுக்களுக்கு அப்பால் நின்று தேசிய அரசியல் கோட்பாடுகளை தள்ளிவைத்து பொருத்தமானதும் சாத்தியமானதுமான அரசியல் நிலைப்பாட்டைப் புரிந்து கொண்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் பிரபாகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களான குணா, தியாககுமார் மற்றும் பாஸ்கரன் கணேசன் ஆகியோருக்கு வாக்களித்து பிரபா கணேசன் அவர்களின் துணிச்சலான அரசியல் செயற்பாடுகளுக்காக அவர்களது கரங்களை பலப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
9 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago