2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

மேதின விழாவில் இனப்பிரச்சினை குறித்து பேசவேண்டியமை கவலையளிக்கிறது: பிரபா கணேசன்

Super User   / 2012 மே 02 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மேதினம் என்பது அரசியல் கட்சிகளின் பலத்தைக் காட்டும் அரங்கம் அல்ல. மாறாக தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க உறுதிபூணும் தினமாகும். இருப்பினும் மேதினத்தன்று இனப்பிரச்சினை சம்பந்தமாக பேசவேண்டியதையிட்டு கவலையடைகிறேன்' என கொழும்பு மாநகரசபை முற்றலில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதின கூட்டத்தில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் உரையாற்றியபோது தெரிவித்தார். 

பிரபா கணேசன் எம்.பி. உரையாற்றுகையில்,

"இன்றைய மேதினத்தில் எமது உடன் பிறப்புகளான மலையக இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட வேண்டும். அவர்கள் இன்னும் 10அடி லயன் அறைகளில் வாழ்ந்து வருகின்றனர். எமது அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை மலையகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் இவர்களது நலன் பேணப்பட வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சி இன்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. தென்னிலங்கையின் மேதினக் கூட்டத்தைக் கூட கூட்ட முடியாத நிலையில் பிரிந்து போயுள்ளது. கொழும்பிலே தமிழ் தேசியம் பேசுபவர்கள் வடக்கிலுள்ள தமிழ் தேசிய வாக்குகளை பெரும்பான்மையின ஐக்கிய தேசிய கட்சிக்கு வாங்கிக் கொடுக்கும் தரகர் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுக்கு தேவையானது எதிர்காலத்தில் பதவிகளும் பட்டங்களுமே. இன்றைய இந்த மாபெரும் கூட்டத்தைப் பார்க்கும் பொழுது அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் அபிமானத்தை தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

யுத்தம் முடிவுற்றிருந்தாலும் யுத்தம் ஆரம்பித்ததற்கான காரணம் இன்னும் தீர்த்து வைக்கப்பட வில்லை. இனப்பிரச்சினை தீர்வில் வெளிநாட்டு அழுத்தங்கள் முழுமையான தீர்வை பெற்றுத்தராது. முள்ளிவாய்க்காலில் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னை வெளிநாடுகள் காப்பாற்றும் என்று நம்பி ஏமாந்து போனார். இன்றும் வெளிநாடுகளின் மூலம் இனப்பிரச்சினை தீர்வு கிடைக்குமென்று தமிழ் சமூகம் நம்பியிருக்குமேயானால் நாமும் ஏமாந்து போவோம். இனப்பிரச்சினைக்கான தீர்வை வெளிநாடுகளோ அல்லது சிங்களத் தலைமைகளோ மக்கள் மீது திணிக்க முடியாது.

இந்த நாட்டில் வாழும் 70 வீதத்திற்கும் அதிகமான சிங்கள மக்கள் மனதிலே ஏற்படும் அரசியல் தீர்வே நிரந்தரமானதாகும். சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுத்து அரசியல் தீர்வை பெறும் முயற்சியில் தமிழ் சிங்கள தலைமைகள் முயற்சிப்பதே காலத்தின் கட்டாயமாகும்.

இனப்பிரச்சினை தீர்வுக்காக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்திருப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள் உள்ள ஏனைய கட்சிகள் அனைத்தும் இதனை வரவேற்பதினால் நானும் உடன்படவேண்டியுள்ளது. ஆகவே நாடாளுமன்ற தெரிவுக் குழுவை கூட்டமைப்பினர் பற்றிப் பிடித்து இனப்பிரச்சினை தீர்வினை அடைய முயற்சிக்க வேண்டும். இனப்பிரச்சினை தீர்வை வேறு உலகத்தில் தேடாமல் எமது அரசாங்கத்தின் மூலமே பெற்றுக் கொள்ள வேண்டும்.  மேதின விழாவில் தொழிலாளர் வர்க்கத்தினரைப் பற்றி பேசாமல் இனப்பிரச்சினை பற்றி பேசும் அளவுக்கு இப்பிரச்சினை முக்கியமானதாக உள்ளதை சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .