2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிம்பாபே ஜனாதிபதியின் உறவினர் எனக்கூறி ஏமாற்ற முயன்ற மாலி பிரஜை கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 15 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்    
   

சிம்பாபே ஜனாதிபதியின் உறவினர் எனக் கூறி ஏமாற்ற முயன்ற 42 வயதான மாலி பிரஜையை நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அதிகாரி காரியாலயத்தைச் சேர்ந்த குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

போலி டொலரை காட்டி சீதுவை நிறுவனமொன்றில் முதலீடு செய்வதாக ஏமாற்றி பணம் பறிக்க முயன்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,

சீதுவை  பிரதேசத்தில் உள்ள காணி விற்பனை நிறுவனம் ஒன்றுடன் வெளிநாடொன்றிலிருந்து குழுவொனறு ஈமெயில் முலமாக தொடர்பு கொண்டுள்ளது. தாங்கள் சிம்பாபே ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் உறவினர்கள் எனத் தெரிவித்துள்ள அக்குழுவினர், குறித்த நிறுவனத்தில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் ஈமெயில் முலமாக தொடர்ந்து தொடர்புகள் பேணப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நேரில் வருகை தந்து பேச்சு வார்த்தை நடத்துமாறு சீதுவையில் உள்ள நிறுவனம் அந்த வெளிநாட்டுக் குழுவினரை கேட்டுள்ளது. அதற்கிணங்க அக்குழுவைச் சேர்ந்த மாலி பிரஜை ஒருவர் இலங்கை வந்துள்ளார்.

50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டிலிருந்து நேரடியாக கொண்டு வரமுடியாது எனவும், இதன் காரணமாக கறுப்பு நிறத்திலான டொலர் தாள்களை இங்கு அனுப்புவோம்.; அதன் மீது இரசாயனத்திரவம் ஒன்றை பூசியவுடன் அது 100 டொலர் பெறுமதியான நோட்டாகும் என்று கூறி அந்த மாலி நாட்டவர் அதனை செய்து காட்டியுள்ளார்.

இவ்வாறு 10 தாள்கள் மீது இரசாயனத்திரவத்தை பூசி அவைகளை டொலராக மாற்றிக் காட்டியுள்ளார். மேலும் அது போல் செய்து காட்டுமாறு குறித்த நிறுவனத்தினர் கேட்ட போது இரசாயனத்திரவம் தீர்ந்து போய் விட்டதாகவும், அதனை வாங்க 2500 டொலர்கள் தேவைப்படுமெனவும். கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் ஈமெயிலில் தொடர்பு கொண்ட குறித்த வெளிநாட்டுக் குழுவினர் இரசாயனத்திரவத்தை வாங்குவதற்காக 2500 டொலர்களை தயாராக வைக்குமாறு கூறியுள்ளனர். இது தொடர்பில் சந்தேகமடைந்த சீதுவையில் உள்ள நிறுவனத்தினர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து,  நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகேயின் ஆலோசனையின் போரில் பொலிஸார் வகுத்த  திட்டத்தின் அடிப்படையில் குறித்த நிறுவனத்தினர் செயற்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து மீண்டும் நிறுவனத்திற்கு வந்த  அந்த வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் 100 டொலர் வடிவிலான  கறுப்பு நிறத்திலான டிமை கடதாசிக் கட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தற்போது சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபரை மன்றில் இன்று ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .