2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

21 வயது இளைஞனின் சடலம் மூன்று மாதங்களின் பின் தோண்டியெடுப்பு

Kogilavani   / 2013 ஜூலை 10 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.இஸட்.ஷாஜஹான்       

நீர்கொழும்பு - ஏத்துக்கால சாந்த சில்வெஸ்டர் மயானத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அடக்கம் செய்ப்பட்ட 21 வயது இளைஞர் ஒருவரின் சடலம் இன்று  புதன்கிழமை பிற்பகல் தோண்டியெடுக்கப்பட்டது.

புத்தளம் நீதமன்றத்தின் உத்தரவை அடுத்து நீர்கொழும்பு மேலதிக நீதவான் துலானி எஸ் வீரதுங்க முன்னிலையில் இந்த சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

நீர்கொழும்பு ஏத்துக்கால ராணமாவத்தையை சேர்ந்த அன்டன் டிக்சன் சோஸா என்ற 21 வயது இளைஞரின் சடலமே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டது.

குறித்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்தே சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக தெரிய வருவதாவது,

கடந்த ஏப்ரல் மாதம் 19  ஆம் திகதி மேற்படி இளைஞரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஐந்து நாட்கள்; சுற்றுலாவை மேற்கொண்டு கற்பிட்டி சென்றுள்ளனர்.

பின்னர் நான்காவது தினம் புத்தளம்  வனாத்தமுல்ல பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவருடைய 50 ஏக்கர் தோட்டம் ஒன்றுக்கு சென்று காலை முதல் மாலை வரை மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். பினனர் அன்று இரவு விடுதியொன்றில் தங்கியுள்ளனர்.

சம்பவத்தில் இறந்த இளைஞருடன் உறவினரான இன்னொரு இளைஞரும் அந்த தோட்டத்தின் முகாமையாளரும் அந்த தோட்டத்திலேயே தங்கியுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த நாள் காலை 5.45 மணியளவில் குறித்த இளைஞர் வாயிலும் மூக்கிலும் இரத்தம் சிந்திய நிலையில் நிலத்தில் வீழ்ந்திருப்பதை உறவினரான இளைஞர் கண்டுள்ளார்.

பின்னர் புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது 5 மணித்தியாலங்களுக்கு முன்னர் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ஏப்ரல் 21 ஆம் திகதி இளைஞனின் மரணசடங்கு  நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற அன்று தோட்டத்தின் முகாமையாளருக்கும் மரணமடைந்த இளைஞருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அப்போது மூவரும் மதுபோதையில் இருந்ததாகவும் மரணமான இளைஞனுடன் தங்கியிருந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே இந்த மரணம் தொடர்பில் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மூச்சுத்திணறி மரணம் சம்பவித்துள்ளதாக மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்த மரணம் தொடர்பாக உறவினர்கள் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

சடலத்தை ராகமை வைத்திய பீடத்திற்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X