Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு இரவுச் சந்தையின் ஒப்பந்தக்காரரால், திடீரென்று அதிக கடைக் கூலி அறவிடுவதற்கு எதிராக, நீர்கொழும்பு இரவுச் சந்தை வியாபாரிகள், நீர்கொழும்பு மாநகர ஆணையாளரிடம், இன்று (18) முறைப்பாடு செய்தனர்.
நீர்கொழும்பு இரவுச் சந்தை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த வியாபாரிகள், மாநகர சபையில் நேற்றுக் காலை ஒன்று கூடி, சங்கத்தின் பிரதிநிதிகள், மாநகர ஆணையாளர் கே.எஸ்.சி. சுகத்குமாரவிடம், தமது பிரச்சினை தொடர்பாக எடுத்துக் கூறினர்.
இதன்போது பொலிஸ் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
இச்சந்திப்பின் பின்னர், நீர்கொழும்பு இரவுச் சந்தை சங்கத்தின் தலைவர் சுமிந்த, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
“ரயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள வீதியில், நீர்கொழும்பு இரவுச் சந்தை நடத்தப்படுகிறது. வருடாந்தம் நாங்கள் 120 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொகையைக் கூலியாக வழங்குகிறோம்.
“ஆனால், வீதியில் சந்தை நடத்தப்படுகிறமையால், எந்தவித அடிப்படை வசதிகளும், இந்தச் சந்தையில் கிடையாது. கடந்த சனிக்கிழமை முதல், கடைகளுக்கான கூலி அதிகரிக்கப்பட்டுள்ளது.
“முன்னர் ஒரு நில அடிக்கு 43.75 ரூபாய் அறவிடப்பட்டது. கடந்த சனிக்கிழமை முதல், ஒரு நில அடிக்கு 60 ரூபாய் அறவிடப்படுகிறது.
“மாநகர ஆணையாளர், புதிதாக ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தக்காரருடன் இணைந்து, இந்த அதிகரிப்பை மேற்கொண்டுள்ளார். எங்களால் இந்த அதிகரிப்புத் தொகையை வழங்க முடியாது.
“ஆணையாளருடனான சந்திப்பின்போது, எதிர்வரும் சனிக்கிழமை, இதுதொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்துக் கலந்துரையாடி, தீர்மானமொன்றுக்கு வருவதாகக் கூறினார்.
“அதிகரித்த தொகையை வாபஸ் பெறாவிட்டால், நாங்கள் எல்லோரும் இரவுச் சந்தை வியாபாரத்தில் ஈடுபடாமல் பகிஷ்கரிப்புச் செய்வோம்” என்றார்.
இதேவேளை, மாநகர ஆணையாளருக்கும் இரவுச் சந்தை வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தையைச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்டது.
இது தொடர்பாக மாநகர ஆணையாளரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க தமக்கு அனுமதி இல்லை எனவும், ஊடகவியலாளர்கள் தமது அனுமதி இல்லாமல், மாநகர சபையின் பகுதியில் எவ்வாறு பிரவேசிக்க முடியும் எனவும் வினவினார்.
பின்னர், இரவுச் சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காணவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார்.
நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கே, இரவுச் சந்தை, புதிதாக ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
2 hours ago