2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

ஆசியாவின் முத்து சோமாலியாவானது

Freelancer   / 2022 ஜூன் 21 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

ஆசியாவின் முத்து என ஒரு காலத்தில் கூறப்பட்ட இலங்கை தற்போது சூடான், சோமாலியா ஆகிய நாடுகளின் நிலைமைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவில்லை என்றால் விரட்டியடிப்போம் எனவும் எச்சரித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (20) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வைத்தியசாலை உபகரணங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. எரிபொருள், எரிவாயு,  மின்சாரம் என்பன நாட்டில் இல்லாது போயுள்ளன. அதேபோல் வைத்தியசாலைகளுக்கு வரவேண்டிய 50 சதவீதமான வைத்தியர்கள் வைத்தியசாலைகளுக்கு வரமுடியாத நிலையே ஏற்பட்டுள்ளது  எனவும் தெரிவித்தார்.

நாட்டு மக்களை ஒருபோதும் பட்டினியில் போடப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுகிறார். ஆனால்,  இலங்கை தொடர்பில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இலங்கையில் 10 குடும்பங்களில் வெறும் ஏழு குடும்பங்கள் ஒருவேளை மாத்திரமே உணவை உட்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மந்தபோசனத்தில் உலக அளவில் 7ஆவது இடத்துக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. ஆசியாவில் இரண்டாவது இடத்தில் இலங்கை இருக்கிறது.  ஒரு இலட்சம் குழந்தைகளில் 14 குழந்தைகள் மந்தபோசாக்கால் உயிரிழப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

சோமாலியா,  சூடான் போன்ற நாடுகளின் நிலைக்கு நாட்டை தள்ளுவதற்காக மக்கள் ஆணை வழங்கப்பட்டது? ஆயிரம் குடும்பங்களில் 14 குடும்பங்கள் உணவின்றி தவிர்ப்பதற்கா மக்கள் ஆணை வழங்கப்பட்டது? நாட்டிலுள்ள ஒவ்வொரு வரிசைகளும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்களமாகவே மாறியுள்ளன.

இவ்வாறான நிலையில் வரிசையில் நின்றவர்களிடம் அத்துருகிரிய, குருநாகல் போன்ற பிரதேசங்களில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பிலும் இதன்போது தனது கண்டனத்தை தெரிவித்ததோடு பொலிஸாரின் இதயம் இரும்பில் செய்யப்பட்ட இதயம் எனவும் கடுமையாக சாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .