2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

இனவாதிகளின் குழப்பங்களைக் கட்டுப்படுத்தவும்: சி.வை.பி.ராம்

Kanagaraj   / 2016 ஏப்ரல் 09 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதும் இனவாதிகள் மக்களைக் குழப்பும் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்தவில்லை. ஆகவே அரசியல் தீர்வொன்றை நிரந்தரமாக்குவதன் ஊடாகவே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியுமென ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சி.வை.பி.ராம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி முதல் இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் துளிர்விட ஆரம்பித்தது. தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டு நல்லாட்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் இனவாதிகளும், அடிப்படைவாதிகளும் தற்போதைய ஆட்சியாளர்களை தொடர்ச்சியாக சேறுபூசும் வகையிலும் உண்மைக்கு புறம்பான வகையிலும் பிரசாரங்களை மேற்கொண்டு நாட்டு மக்களை குழப்பமடையச் செய்கின்றனர்.

தேசிய பாதுகாப்பு விடயத்தை கையிலெடுத்து ஒரு பதற்றமான சூழலை ஏற்படுத்த முயன்றவர்கள் தற்போது வடக்கு மாகாணசபையின் அரசியல் தீர்வுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வு குறித்த விடயங்களை பூதாகரமாக்கி நாடு பிளவடையப்போவதாக கூறுகின்றனர். அதுமட்டுமன்றி நாட்டை பிளவுபடுத்துவதற்காகவே ஜனாதிபதியும், பிரதமரும் செயற்படுவதாக அபாண்டமான பிரசாரத்தையும் மக்கள் மத்தியில் திணித்துவருகின்றனர்.

இவை அனைத்துமே உண்மைக்கு புறம்பானவை. ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வென்று காணப்படவேண்டுமென்பதே தமிழ்த் தலைமைகளின் நிலைப்பாடாகவுள்ளது. அதில் அவர்கள் உறுதியாகவும் உள்ளார்கள். ஆகவே வேண்டாத கருத்துக்களை முன்வைத்து இந்த நாட்டிலுள்ள இனங்களுக்கிடையில் ஐயப்பாடான சூழலொன்றை அரசியல் சுயநலன்களுக்காக உருவாக்கக்கூடாது.

அதேநேரம் நல்லிணக்கத்தின் பின்னர் அரசியல் தீர்வா, அரசியல் தீர்வின் பின்னர் நல்லிணக்கமா எனப் பட்டிமன்றம் நடத்துவதை விடுத்து நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேநேரம் விரைவில் நிரந்தரமான அரசியல் தீர்வொன்றையும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

நீதி அமைச்சர் விஜதாஸ ராஜபக்ஷ தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேசாது தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டமுடியாதென கூறியிருக்கின்றார். இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடாகவும் உள்ளது.

ஆகவே கட்சித்தலைமைகள் அனைத்தும் தேசிய பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பது குறித்த பேச்சுக்களை உடன் ஆரம்க்கும் அதேநேரம் அடித்தட்டு மக்கள் மத்தியிலிருந்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அவர்கள் கொண்டிருக்கும் ஐயப்பாடுகளை நீக்கும் வகையிலான உரிய வழிப்பூட்டல்களையும் மேற்கொள்வது இன்றியமையாததாகின்றது என்றுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X