2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

இராணுவத் தலைமையக நிர்மாணத்தில் முறைகேடு: கோட்டாவை சாடுகின்றது ஜே.வி.பி

Princiya Dixci   / 2016 ஜூன் 27 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாநூ கார்த்திகேசு

அத்துறுகொடையில் முப்படைகளுக்கென அமைக்கப்பட்டு வருகின்ற இராணுவத் தலைமையத்தின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனம், இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திலோ அளவைகள் பிரிவு, தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்திலோ உரிய காலத்தில் அதனைப் பதிவு செய்யவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மேற்கண்ட நடைமுறை இருக்கையில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தலையீட்டிலேயே இந்த நிர்மாணப் பணிகளுக்கான கேள்விப்பத்திரம் குறித்த தனியார் நிறுவனத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

'இந்நிறுவனத்துக்கு கேள்விப்பத்திரம் ஒப்படைத்தமை தொடர்பில் ஆய்வு செய்யுமாறு அமைச்சரவை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முப்படைத் தலைமையகக் கட்டட நிர்மாணத்துக்கான கேள்விப்பத்திர ஒப்படைப்பானது 2000ஆம் ஆண்டே அமைச்சரவைக்கு வந்தபோதிலும் அது காலம் தாழ்த்தப்பட்டது. பின்னர் 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08ஆம் திகதி வழங்கப்பட்டது.

'ஆனால், 2010ஆம் ஆண்டு இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அளவைகள், பிரிவு, தரங்கள் மற்றும் சேவைகள் நிறுவனத்தில் 2011ஆம் ஆண்டும் அதனைப் பதிவு செய்துள்ளது. 

இந்நிறுவனமானது அரசியல் செல்வாக்கினைப் பயன்படுத்தியே குறித்த கேள்விப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை இவ்விடயத்திலிருந்து தெளிவாகின்றது.

'அதேநேரம், இந்நிறுவனமே கடந்த ஆட்சிக்காலத்தில் கம்பஹாவில் அமைந்துள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டு நிர்மாணப் பணியையும் பசில் ராஜபக்ஷவின் வீட்டு நிர்மாணப் பணியையும் இலவசமாக செய்து கொடுத்தே அரசாங்கத்தின் கேள்விப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

'தற்போதைய அரசாங்கம் குறித்த நிறுவனத்துக்கு 60 கோடி ரூபாயை கட்டட நிர்மாணப் பணிக்கு வழங்கியுள்ளதுடன், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு இன்னமும் 85 கோடி ரூபாயினை குறித்த கேள்விப்பத்திரத்துக்கென கடன்பட்டுள்ளது.

'இந்த நிறுவனத்துக்கும் ஓமானில் உள்ள 'நசல்' என்ற நிறுவனத்துக்கும் தொடர்புள்ளது. அந்நிறுவனத்தின் ஊடாகவே இராணுவ தலைமையகத்துக்கான கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது' என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X